

சென்னை அருகே புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் ஒரு கட்டிடம் தரமாக இருக்கிறதா இல்லையா என்பதை ஆராய ஒரு முறையான அமைப்பு தேவை என்பதை உணர்த்தியுள்ளது.
கடந்த 2012 அக்டோபரில் திருவல்லிக்கேணியில் ஒரு பழைய அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். அப்போது சுறுசுறுப்படைந்த மாநகராட்சி அதிகாரிகள், சில விதிமுறைகளை சொல்லிவிட்டு பின்னர் அதை கிடப்பில் போட்டனர்.
இந்நிலையில்தான் மவுலிவாக்கம் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 11 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடத்தில் வீடு வாங்குவதற்காக ஏராளமானோர் முன்பணம் கட்டியுள்ளனர். கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த நிலையில் சாதாரண மழைக்கே இடிந்து விழுந்துவிட்டது. கட்டி முடித்து அனைவரும் குடியேறிய பிறகு இடிந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும். கட்டிடம் இடிந்து நொறுங்கிய இடம் ஏரிப்பகுதி என்றும் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து தேசிய அளவிலான கட்டுமான சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
பொறியாளர்கள், கட்டிடக் கலை வல்லுநர்கள், டிசைனர்கள் என பல தரப்பட்ட நிபுணர்கள், குறிப்பாக பல்லாண்டு அனுபவம் பெற்றவர்கள் சேர்ந்து முறையாக திட்டமிட்டு கட்டிடப்பணியை செயல்படுத்த வேண்டும். முதலில் கட்டிடம் அமையவிருக்கும் பகுதியின் மண்ணின் தன்மையை ஆய்வுக்குட்படுத்தி, அதற்கேற்ப கட்டிடங்களின் வடிவமைப்பை உருவாக்க வேண்டும். ஆனால், இன்றோ புற்றீசல் போல் பல தனியார் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களைக் கட்டத் தொடங்கியிருக்கின்றன. அடுக்குமாடி கட்டுமானத் தொழிலில் முன் அனுபவம் இருக்கிறதா என்பதையெல்லாம் அதிகாரிகள் ஆராய்ந்து பார்ப்பதில்லை. அதற்கான வழிமுறைகளும் வகுக்கப்படவில்லை.
இதுதவிர, கட்டிடத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை எக்காரணம் கொண்டும் அந்த இடங்களில் தங்க வைக்கக் கூடாது. இதனை பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை.
வடமாநிலத்தவர்கள்
தமிழகத்தில் உள்ள தொழிலாளர்கள் கூலி அதிகமாகக் கேட்பதாலும், குறைந்த கூலிக்கு மற்ற மாநிலங்களில் ஆள் கிடைப்பதாலும் வடமாநிலத்தவர்களை இங்குள்ள பல கட்டுமான நிறுவனங்கள் பணிக்கு அமர்த்துகின்றன.
தற்போது விபத்துக்குள்ளான கட்டிடத்தில் இடிதாங்கி இல்லாததால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இத்தொழிலில் அனுபவமற்ற நிறுவனங்கள் ஈடுபடுவதைத் தடுப்பதுடன் தொழிலாளர்களுக்குத் தேவையான வசதி செய்து தராத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தர நெறிமுறைகள்
கட்டிடம் கட்டுவதற்கு முன் மாநகராட்சியோ, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமோ அதற்கான திட்ட அனுமதியை வழங்குகின்றன. அதன்பிறகு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதும், பணி முடிந்ததற்கான சான்றிதழையும் அவை வழங்குகின்றன. ஆனால், கட்டிடம் கட்டும்போதே அது தரமாகக் கட்டப்படுகிறதா, தரமான பொருட்களைக் கொண்டுதான் கட்டப்படுகிறதா என்பதை ஆராய அரசிடம் வழிவகைகள் ஏதும் இல்லை.
எனவே, புதிய கட்டிடங்கள் கட்டப்படும்போது அப்பணி முடியும் வரை, இடையிடையே அதிகாரிகள் சென்று கண்காணிக்கும் வகையில் புதிய நெறிமுறைகளை சிஎம்டிஏவும் மாநகராட்சியும் உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இப்பணியில் ஈடுபடுத்தப்படும் அதிகாரிகள், முறைகேடுகளில் ஈடுபடாதவகையில், கட்டிடத்தின் உறுதித்தன்மைக்கு அவர்களைப் பொறுப்பாளிகளாக்கும் வகையில் விதிகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான் அந்த கண்காணிப்பு நடைமுறை, நேர்மையாக நடைபெறும் என்கிறார் சிஎம்டிஏ-வில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற முன்னாள் நகரமைப்பு வல்லுநர்.