Last Updated : 30 Jul, 2022 06:33 PM

 

Published : 30 Jul 2022 06:33 PM
Last Updated : 30 Jul 2022 06:33 PM

வேளாண்மைத் துறையிலிருந்து தோட்டக்கலைத் துறைக்கு தென்னை சாகுபடியை மாற்ற திட்டம்: விவசாயிகள் கடும் எதிர்ப்பு

தஞ்சாவூர்: தமிழக வேளாண்மைத் துறையிலிருந்து தென்னை சாகுபடியை தோட்டக்கலைத் துறைக்கு மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறி, அதற்கு தென்னை விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

அகில இந்திய அளவில் தென்னை உற்பத்தியில் தமிழகம் 2-வது இடமும், உற்பத்தி திறனில் முதலிடமும், சாகுபடி பரப்பில் 3-வது இடமும் வகித்து வருகிறது. தமிழகத்தில் கோவை, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 37 மாவட்டங்களில் மொத்தம் 10,84,116 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பகுதிகளில் தென்னை விவசாயம் பரவலாக இருந்த நிலைமாறி, தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி என்று பல மாவட்டங்களில் தென்னை சாகுபடி பரப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி வருகிறது.

மேலும், தொடக்க காலம் முதல் தென்னைப் பயிர் வேளாண்மைத் துறையின் கீழ் இருந்து வருவதால், அனுபவமிக்க களப்பணியாளர் உள்ள நிலையில் தென்னை விவசாயிகள் அவர்களிடம் ஆலோசனை பெறுவது எளிதாகி உள்ளது.

ஓரளவு தண்ணீர் வசதி இருக்கும் பகுதிகளில்கூட, வேளாண்மைத் துறையினரின் ஆலோசனையின்படி, குறைந்த நீரை பயன்படுத்தி சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து தென்னை சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்னையில் ஊடுபயிர் பயிரிடும்போது, வேளாண்மைத் துறையினரே உரிய ஆலோசனைகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகள் மத்தியில் வேளாண்மைத் துறையின் கீழ் முக்கிய அங்கம் வகித்து வரும் தென்னையை தோட்டக்கலைத் துறைக்கு மாற்றம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு தென்னை விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொடர்ந்து வேளாண்மைத் துறையின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில் தென்னை விவசாயிகள் தங்களது எதிர்ப்பை பதிவுசெய்து வருகின்றனர்.

இதுகுறித்து நசுவினி ஆறு படுக்கை அணை, விவசாயிகள் மேம்பாட்டுச் சங்கத்தின் தலைவர் பட்டுக்கோட்டை வா.வீரசேனன் கூறியது: தமிழ்நாட்டில் தென்னை பயிர் நீண்டகாலமாக வேளாண்மைத் துறை பட்டியலில் இருந்து வருகிறது.

தென்னை நீண்டகால பயிர் என்பதாலும், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் பாதிப்பு உள்ளாகி வரும் நேரங்களில் வேளாண்மைத் துறையில் கீழ்மட்ட அளவில் போதிய களப்பணியாளர் இருப்பதாலும், தென்னை விவசாயிகளுக்கு பூச்சி நோய் மற்றும் நீர் மேலாண்மை குறித்து தொழில்நுட்ப அறிவுரைகளை வழங்குவதாலும், புயல், வறட்சி போன்ற காலங்களில் பயிர் சேத கணக்கீடு மேற்கொண்டு விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத் தருதல் மற்றும் தென்னை வளர்ச்சி வாரிய திட்டங்கள் மற்றும் அனுகூலங்களை உடனுக்குடன் பெற்றுத் தர வேளாண்மை துறையில் போதிய களப்பணியாளர்களை கொண்டுள்ளதால், தென்னைப்பயிர் தொடர்ந்து வேளாண்மைத் துறையிலேயே நீடிப்பது விவசாயிகளுக்கு நன்மை தருவதாக இருக்கும்.

அதேநேரத்தில், தோட்டக்கலைத் துறையில் போதிய களப்பணியாளர்கள், போதிய தொழில்நுட்பவியலாளர்கள் இல்லாததால், அந்த துறைக்கு தென்னைப் பயிரை மாற்றம் செய்தால், தென்னையில் நோய் தாக்குதல் ஏற்படும்போது, விவசாயிகள் ஆலோசனை பெறுவதில் சிரமம் ஏற்படும்.

ஏற்கெனவே தோட்டக்கலைத் துறையில் உள்ள வாழை, வெற்றிலை, மலர்கள் உள்ளிட்ட சில பயிர்கள் சாகுபடியில் தோட்டக்கலைத் துறையின் ஆலோசனை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

எனவே, தென்னை விவசாயிகளின் நலன் கருதி, தென்னை தொடர்ந்து வேளாண்மைத் துறையில் இருக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், துறை மாற்றம் செய்யும் முன்பாக தென்னை விவசாயிகளிடம் கருத்துகளை கேட்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x