சென்னையில் ‘மெட்ராஸ் ஐ' பரவல்

சென்னையில் ‘மெட்ராஸ் ஐ' பரவல்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் 'மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் நோய் பரவி வருகிறது. இங்குள்ள மருத்துவமனைகளில் தினமும் 50-க்கும் மேற்பட்டோர் இந்நோய்க்கு சிகிச்சைப் பெறுகின்றனர். குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக கண் மருத்துவர்கள் கூறியதாவது: காலநிலை மாற்றத்தால் 'மெட்ராஸ் ஐ' பரவி வருகிறது. விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் மெட்ராஸ் ஐ ஆகும்.

இது காற்று மூலம் பரவுகிறது. மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் உபயோகப்படுத்தினால், அவர்களுக்கு அந்நோய் தொற்று பரவும். மெட்ராஸ் ஐ எளிதில் குணப்படுத்தக்கூடியது.

ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சைப் பெற வேண்டும். கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் வெளியேறிக் கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் போன்றவை மெட்ராஸ் ஐ அறிகுறிகளாகும்.மெட்ராஸ் ஐ வந்தால் தனியாக இருக்க வேண்டும்.

தனியாக டவல், சோப்பு ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். கண் வலி தான் என்று மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. சில நேரங்களில் கருவிழி பாதிப்பு கூட ஏற்படலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in