

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமைக்க வேண்டும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி சொல்வது ஜனநாயக விரோத செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் பூரண குணமடைந்து வழக்கம் போல் அவர் தனது பணிகளை தொடர வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்.
இதற்கு மாறாக முதல்வரின் உடல்நிலையை காரணம் கூறி தமிழகத்தில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 365-ஐ பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சி அமைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். மேலும், சட்டப்பேரவையை முடக்க வேண்டும் என்றும் சென்னை மற்றும் தென் தமிழகத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை 6 மாத காலத்துக்கு அமல்படுத்திட வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. இது மிகவும் கண்டத்துக்குரியது.
இது அவரின் சொந்தக்கருத்தா அல்லது பிரதமர், பாஜக தலைமை, தமிழக பாஜக ஆகியோரின் கருத்தா என்பது குறித்து சமபந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். பாஜக குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசை கலைக்க முற்படுவது ஜனநாயக விரோத செயலாகும்.
முதல்வரின் உடல் நிலையைக் காரணம் காட்டி, ஜனநாயக விரோதசெயலில் யார் ஈடுபட்டாலும், அதனை தமிழக மக்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.