Published : 30 Jul 2022 04:23 AM
Last Updated : 30 Jul 2022 04:23 AM

அப்துல் கலாமின் அறிவியல் சிந்தனைகள் எல்லா தலைமுறைக்கும் ஏற்றவை - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்

சென்னை: இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் நினைவைப் போற்றும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் இணையவழி சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்வு கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இதில், இஸ்ரோ முன்னாள் இயக்குநரும், மூத்த விஞ்ஞானியுமான பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு இருவரும் பங்கேற்றனர்.

இக்கலந்துரையாடலில் அவர்கள் பேசியதாவது:

பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் கடந்த ஓராண்டு காலமாக முன்னெடுத்துவரும் ‘கலாமை கொண்டாடுவோம்’ இணையவழி கலந்துரையாடலின் நிறைவு நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. எனக்கும் அப்துல் கலாமுக்குமான முதல் சந்திப்பு கொஞ்சம் நாள் தள்ளித்தான் நடைபெற்றது. இந்திய விண்வெளித் துறையில் இருந்த கலாம், அதைவிட்டு பாதுகாப்புத் துறை ஆராய்ச்சிக்கு சென்ற சமயம், 1982-ல் நான் விண்வெளித்துறைக்குள் சென்றேன்.

பின்னர், நடுநிலையில் இருக்கும் அறிவியலாளர்களுக்கு நடைபெற்ற பயிற்சிக்கு நான் சென்றேன். அதற்கு டிஆர்டிஓ-வில் இருந்த கலாம் வந்தார். எங்களோடு உரையாடினார். அப்போது கலாமிடம் கார்கில் போர் பற்றி நான் ஒரு கேள்வி கேட்டேன்.

என் அருகில் வந்த கலாம், என் கண்களைப் பார்த்து பதில் சொன்னார். ‘எந்தவொரு தருணத்திலும் பிரச்சினைகள் வரலாம். அதை நாம் பிரச்சினையாகப் பார்க்காமல், நமக்கு கிடைத்திருக்கும் ஒரு சந்தர்ப்பமாக நினைத்து, அதற்கொரு தீர்வுகாண முயல வேண்டும்’ என்றார். எந்த பள்ளியிலும் நான் கற்றிராத ஒன்றை முதல் சந்திப்பிலேயே கலாமிடமிருந்து கற்றேன். அதுதான் என்னை இன்றைக்கும் இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது.

2008, அக். 22-ம் தேதி, சந்திராயன் – 1 விண்ணில் ஏவப்பட்டது. அன்றைக்கு ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கலாம் வரவில்லை. சந்திராயன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு, ஒரு நாள் கலாம் என்னை அழைத்து, ‘எப்போது அங்கு வந்து பார்க்கலாம்’ என்றார். உடனே நான், ‘நவம்பர் 14 அன்று வாருங்கள்; அன்றுதான் உங்கள் பேபி நிலவில் இறங்கவிருக்கிறது’ என்றேன்.

‘என்னுடைய பேபியா?’ என்று கேட்டார் கலாம். ‘ஆமாம்; சந்திராயனில் அனுப்பிய நிலவுமோதுகலன் உங்களின் சிந்தனையில் உருவானது. அதனால் அது உங்கள் பேபி’ என்றேன். மிகவும் மகிழ்ச்சியோடு புன்னகைத்தார்.

சந்திராயன் உருவாகிக்கொண்டிருக்கும்போதே கலாம், குடியரசுத் தலைவராகிவிட்டார். ஆனபோதும் எங்களது ஆராய்ச்சிப் பணிகளுக்கு நல்ல பல ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கினார். அப்துல் கலாமின் அறிவியல் சிந்தனைகள் எல்லா தலைமுறைகளுக்கும் ஏற்றதாகவே அமைந்துள்ளன.

ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு: தனது செயல், சிந்தனை அனைத்தும் நாட்டின் நலன் சார்ந்ததாகவும், இந்த தேசம் அறிவியல் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்றதாக விளங்க வேண்டுமென்றும் பெரிதும் விரும்பியவர் கலாம். அதற்காகவே சிந்தித்தார். தனது வாழ்நாளை அதற்கெனவே செலவளித்தார். ‘பிரச்சினையின் ஒரு பகுதியாக நீங்கள் இருக்கிறீர்களா அல்லது தீர்வின் ஒரு பகுதியாக நீங்கள் இருக்கிறீர்களா?’ என்று நம்மிடம் கேள்வி கேட்டு, நமக்குள் பிரச்சினைக்கான தீர்வினைத் தேடும் ஒரு விதையை விதைத்தவர் கலாம். அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்ற அறிவியல் தமிழ் ஆளுமையாளர்களின் விரல்கள் நிலவைத் தொட்டு, நம் தேசத்திற்கே பெருமை தேடித்தந்துள்ளன. செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்துக்குள்ளும் தமிழனின் விரல்கள் நுழைந்திருக்கின்றன என்பதும் நமக்குப் பெருமையே. ‘தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்ய வேண்டும்’ என்றார் மகாகவி பாரதி. வீதிகளில் தமிழ் முழக்கம் மட்டுமல்ல; பால் வீதிகளிலும் தமிழ் முழக்கம் செய்திருக்கிறார்கள் தமிழ் அறிவியல் ஆளுமையாளர்கள்.

கலாம் என்கிற மாமேதை இன்றைக்கு நம்மிடையே இல்லையென்றாலும், கோடிக்கணக்கான இந்தியர்களைத் தம் வாழ்வின் வெற்றியை நோக்கிச்செல்ல வேண்டும் என்று உந்தித்தள்ளிய சரித்திர புருஷனாக கலாம் விளங்கினார். அவரது சாதனைகளை, சிந்தனைகளைப் பேசுவதன் மூலம் இளம் தலைமுறையினருக்கு அவரது சிந்தனைகளைப் பதியமிடுவோம். இதனால் இந்தியா வல்லரசாக, நல்லரசாக வளரும் என்கிற நம்பிக்கையில் கலாமை கொண்டாடுவோம். அவரது சிந்தனைகளைப் போற்றுவோம். இவ்வாறு அவர்கள் பேசினர்.

இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் நெறிப்படுத்தினார். இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடைகளை அனுப்பும் 25 பேருக்கு மூத்த விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு இருவரும் எழுதிய ‘விண்ணும் மண்ணும்’ புத்தகங்கள் பரிசாக வழங்கப்படவுள்ளன. இந்த நிகழ்வை காணத் தவறியவர்கள் https://www.htamil.org/00849 என்ற லிங்க்-கில் பார்த்து பயன்பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x