போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தம்: ஆக.3-ல் 6-ம் கட்ட பேச்சுவார்த்தை

போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தம்: ஆக.3-ல் 6-ம் கட்ட பேச்சுவார்த்தை
Updated on
1 min read

சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 6-ம் கட்ட பேச்சுவார்த்தை ஆக.3-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 5 கட்டங்களாக நடந்துள்ளன. இறுதியாக கடந்த 11-ம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் சென்னை குரோம்பேட்டையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தொழிற்சங்கத்தினரின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தை குறித்து அறிவிப்பு வெளியாகாத நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கான நோட்டீஸை போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்களிடம் சிஐடியு தொழிற்சங்கத்தினர் வழங்கினர். ஆகஸ்ட் 3 அல்லது அதற்கு பிறகு வேலைநிறுத்தம் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடர்பான அறிவிப்பை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து 67 தொழிற்சங்கங்களுக்கு போக்குவரத்து துறை அனுப்பிய சுற்றறிக்கையில், “சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளாகத்தில் ஆக.3-ம் தேதி காலை 11 மணி அளவில் 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இதில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும் வகையில், தொழிற்சங்கத்துக்கு ஒரு பிரதிநிதி மட்டும் ஏற்கெனவே வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் பங்கேற்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in