Published : 30 Jul 2022 07:06 AM
Last Updated : 30 Jul 2022 07:06 AM
சென்னை: சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, அதிமுகவில் இரு அணிகளாக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரை தனியாக சந்திக்காமல் திரும்பிச் சென்றது அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் தலைமையில் இரு அணிகள் செயல்பட்டு வருகின்றன. இரு தரப்பினரும் புதிய நிர்வாகிகளை நியமித்தல், கட்சியில் இருந்து நீக்குதல் போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம், நீதிமன்றத்திலும் சட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். அப்போது பிரதமர் மோடியை தனியாக சந்தித்துப் பேச முயன்றதாகவும், அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
அதன்பின், புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற பழனிசாமியும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச முயன்றார். ஆனால், அவருக்கும் நேரம் ஒதுக்கப்படவில்லை என கூறப்பட்டது. இதனால், அவர் உடனடியாக சென்னை திரும்பிவிட்டார்.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பழனிசாமி வரவேற்றார்.
அதேபோல, 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று அகமதாபாத் சென்ற பிரதமரை வழியனுப்பி வைக்க ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையம் சென்றிருந்தார். விமான நிலையத்தில் பிரதமரை சந்தித்தபோது, ‘உங்கள் உடல்நலம் எப்படி இருக்கிறது’ என அவர் கேட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
டெல்லியில் தங்களை பிரதமர் சந்திக்காத நிலையில், சென்னை வருகையின்போது அவரை ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனியாக சந்தித்து பேசக்கூடும் என செய்திகள் வெளியாகின. ஆனால், அதுபோன்ற தனிப்பட்ட சந்திப்பு எதுவும் நடக்கவில்லை.
கடந்த 2017-ல் இதேபோன்று ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனி அணிகளாக செயல்பட்டபோது, பிரதமர் மோடி தலையிட்டு அவர்களை இணைத்து வைத்தார். அதேபோல, இப்போதும் இரு அணிகளையும் சேர்த்து வைக்க பிரதமர் முயற்சிப்பார் என அதிமுக தொண்டர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
ஆனால், இருவரையும் பிரதமர் சந்திக்காமல் சென்றது அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக கருத்து
ஓபிஎஸ், இபிஎஸ்ஸை பிரதமர் சந்திக்காதது குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டபோது, “ஒரு கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக எப்போதும் தலையிடுவதில்லை. இதை நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். தற்போது பிரதமர் மோடி, அதிமுக தலைவர்களை தனியாக சந்திக்காமல் சென்றிருப்பது, நாங்கள் ஏற்கெனவே கூறிய கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT