Published : 30 Jul 2022 07:00 AM
Last Updated : 30 Jul 2022 07:00 AM

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு பணி தொடர்பாக கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி ஆக.1-ல் ஆலோசனை

சென்னை: வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கும் நிலையில், இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்துகிறார்.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. இப்பணிகளை 2023 மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்கும் வகையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதற்கென ‘6 பி’ என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி ஆலோசனை நடத்தப்படுகிறது.

அன்று தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையிலும், தொடர்ந்து, மாவட்டங்களில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமையிலும் இந்த ஆலோசனை கூட்டங்கள் நடக்க உள்ளன.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது: வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் மாபெரும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்குகிறது. இதற்கு அரசியல் கட்சிகளின் முழு ஒத்துழைப்பும் அவசியம் என்பதால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. வாக்காளர் பட்டியல் - ஆதார் எண் இணைப்பு பணியை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது குறித்து இக்கூட்டத்தில் கட்சிகளின் ஆலோசனைகள் பெறப்படும்.

வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்படும். இப்பணிகள் வரும் அக்டோபர் 1-ம் தேதி தொடங்க உள்ளது.

புதிய நடைமுறை அறிமுகம்

இந்த முறை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. வழக்கமாக, 18 வயது பூர்த்தியான பிறகே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியும். ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு இப்பணி மேற்கொள்ளப்படும்.

அதன்படி ஜனவரி 1-ம் தேதிக்குள் 18 வயது பூர்த்தியடைபவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். ஒருவேளை, ஜனவரி 2-ம் தேதி 18 வயது பூர்த்தியடைந்தால்கூட, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு அவர் ஓராண்டு காத்திருக்க வேண்டும்.

இதை தவிர்க்க, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகளை ஒவ்வொரு காலாண்டிலும் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தேர்தல் ஆணைய விதிமுறைகளில் திருத்தம் கெண்டுவரப்படுகிறது. இந்த புதிய நடைமுறை குறித்தும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.

அக்டோபரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும். 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டங்களும் நடைபெறும் என்பதால், அக்கூட்டத்தில் திருத்தப் பணிகள் குறித்து உரிய ஆலோசனைகள் பெறப்படும். திருத்தப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிமுகவில் யாருக்கு அனுமதி?

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் தனித்தனியாக செயல்பட்டு வரும் சூழலில், தலைமை தேர்தல் அதிகாரி நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “வழக்கம்போல, அதிமுக உட்பட அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் அலுவலகங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். அதிமுக சார்பில் அந்த கடிதத்தை பெற்றுக் கொள்பவர்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள்” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x