Published : 30 Jul 2022 07:10 AM
Last Updated : 30 Jul 2022 07:10 AM

சின்னசேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

சென்னை: சின்னசேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் யாரையும் பாதுகாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி சமீபத்தில் மரணம் அடைந்தார். மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, மாணவியின் உடல் மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.

மேலும், இந்த வழக்கில் மாணவியின் மரணத்துக்கான காரணங்களை கண்டறிந்து உண்மையான குற்றவாளிகள் தப்பிக்காத வகையில் விசாரணை அதிகாரி செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, காவல் துறை தரப்பில் அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

மாணவியின் உடல், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் அமைதியான முறையில் செய்து முடிக்கப்பட்டன. அவை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. மறு பிரேதப் பரிசோதனை ஆவணங்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக டிஐஜி தலைமையில் எஸ்.பி. கூடுதல் எஸ்.பி. டிஎஸ்பி, ஆய்வாளர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் நடத்தப்படும் ஊடக விசாரணைகளால் போலீஸ் விசாரணையில் ஒருவித தாக்கம் ஏற்படுகிறது. மாணவியின் மரணம் மற்றும் கலவரத்தின்போது வதந்தி பரப்பி ஊடக விசாரணை நடத்திய 63 யூ-டியூப் சேனல்கள், 31 ட்விட்டர் கணக்குகள், 27 முகநூல் பக்கங்கள் ஆகியவற்றில் உள்ள பதிவுகளை நீக்கும்படியும், அவற்றின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாணவி மரணம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் யாரையும் பாதுகாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.

கடந்த 27-ம் தேதி முதல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 9 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் தற்காலிகமாக அருகில் உள்ள பள்ளிகளில் கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலைமைசீராக இன்னும் 2 வாரம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி என்.சதீஷ்குமார் கூறியதாவது: இதே நிலை நீண்ட நாட்களுக்கு தொடரக் கூடாது. விரைவில் அதே பள்ளியிலேயே வகுப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களை பாடம் படிக்கும் இயந்திரமாக பார்க்காமல், அவர்களுக்கான சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமை.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தற்கொலை சம்பவங்களை தடுக்க மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். மாவட்டத்துக்கு ஒரு மனநல ஆலோசகராவது இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, விடுதிகளுடன் கூடிய பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் இருப்பது மிகவும் அவசியம்.

ஊடகங்கள் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களை மீண்டும் மீண்டும் பெரிதுபடுத்தி, மற்ற மாணவர்களின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது. ஊடகங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். விசாரணைக்கு இடையூறாக உள்ள சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல் துறையே முடிவு எடுக்கலாம்.

இவ்வாறு கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x