

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கல் குவாரியில் நேற்று கற்கள் சரிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். பெரம்பலூர் மாவட்டம் கவுள்பாளையம் காளியம்மன் நகரைச் சேர்ந்தவர் சின்னபையன் மகன் முருகேசன் (50).
இவர், மாவட்ட நிர்வாகத்திடம் உரிமம் பெற்று, கவுள்பாளையத்தில் கல் குவாரி நடத்தி வருகிறார். இவரது தம்பி சுப்பிரமணி(40).
இந்நிலையில், நேற்று காலைஇந்த கல் குவாரியின் மேற்பகுதியில் நின்றுகொண்டு, அங்குநடைபெறும் பணிகளை சுப்பிரமணி மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, இவர் நின்றிருந்த பகுதியில் இருந்த கற்கள் எதிர்பாராதவிதமாக சரிந்ததில், அவர் நிலைதடுமாறி, வெட்டி எடுக்கப்பட்ட குவாரி குழிக்குள் விழுந்தார்.
இதில், அவர் மீதும், குவாரியின்கீழ் பகுதியில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி ஓட்டுநர் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(35) மீதும் கற்கள் விழுந்தன. இதில், சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி உயிரிழந்தார். படுகாயமடைந்த செந்தில்குமார் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ஆட்சியர் ப.ஸ்ரீ வெங்கடபிரியா, எஸ்.பி மணி ஆகியோர், விபத்துநடந்த கல் குவாரிக்குச் சென்றுபார்வையிட்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியபோது, “கல் குவாரியை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கல்குவாரியில் ஏதேனும் விதிமீறல்கள் உள்ளதா என விசாரித்து அறிக்கை தர கனிம வளத்துறை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். இந்த விபத்து குறித்து மருவத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, உயிரிழந்த டிப்பர் லாரி ஓட்டுநர் செந்தில்குமாரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இயங்கிய கல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி செந்தில்குமாரின் உறவினர்கள் மற்றும் இந்திய தொழிலாளர் கட்சியினர் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீஸார் மற்றும் வருவாய்த் துறைஅலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.