

விருதுநகர்: மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக நேற்று முன்தினம் இரவு காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது சதுரகிரி மலையிலும், மலைப்பாதையிலும் சிக்கித் தவித்த 2 ஆயிரம் பக்தர்கள் கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று முன்தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்காக கடந்த 25-ம்தேதி முதல் சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதிஅளிக்கப்பட்டது. நேற்று முன்தினம்ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி சதுரகிரி மலையில் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் வழிபட்டனர்.
நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மலையில் கோயில்கள் உள்ள வனப்பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. சுவாமி தரிசனம் முடித்த பக்தர்கள் மாலையில் மலையிலிருந்து கீழே இறங்க அறிவுறுத்தப்பட்டனர். கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் மலையிலிருந்து இறங்குவது தாமதமானது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்தது. இதனால், காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களுக்கு இடையே உள்ள காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சதுரகிரி மலைப்பாதையில் உள்ள காட்டாறுகள் மற்றும் ஓடைகளை கடக்க முடிக்க முடியாமல் சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் தவித்தனர். மேலும் சதுரகிரி மலைப்பாதையில் காராம்பசுத்தடம் பகுதியில் 7 இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்தன. அப்பகுதியில் பக்தர்கள் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
அடிவாரப் பகுதியில் மழை இல்லாததால் அங்கிருந்த காவலர்கள், வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் பல்வேறு குழுக்களாக மலையேறிச் சென்று காட்டாறுகள் மற்றும் ஓடைகளின் குறுக்கே கயிறு கட்டி மலைப் பாதையில் தவித்த பக்தர்களை பாதுகாப்பாக மீட்டு அடிவாரப் பகுதிக்குஅழைத்து வந்தனர். மேலும் மலையிலிருந்த 800-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை காட்டாறுகளில் வெள்ளம் குறைந்ததும் அடிவாரப் பகுதிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மலையிலிருந்து பக்தர்கள் பாதுகாப்பாக கீழே இறங்கி வர வேண்டும் என்பதற்காக நேற்று அதிகாலை முதல் காலை 9 மணிவரை சதுரகிரி மலைக்குச் செல்லபக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தாணிப்பாறை நுழைவாயில் பகுதியில் வனத்துறை கேட் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காத்திருந்தனர்.
காலை 9 மணிக்கு பின்னர் வனத்துறை கேட் திறக்கப்பட்டு பகல் 1 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். நேற்று சுமார் 6 ஆயிரம் பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் சென்றனர்.
திடீர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பக்தர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு மலைப் பாதையில் 10 இடங்களில் போலீஸார், வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் என 300-க்கும் மேற்பட்டோர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.