

மாமல்லபுரம்: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கியதால் மாமல்லபுரம் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் வருகையால் போட்டி நடைபெறும் அரங்க வளாகம் உட்பட கிழக்கு கடற்கரைச் சாலை வண்ணமயமாக காட்சியளிக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கின. வரும் 10-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும். இதில், இந்தியா உள்ளிட்ட 187 நாடுகளைச் சேர்ந்த 2,500 வீரர், வீராங்கனைகள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், சர்வதே செஸ் போட்டியின் முதல் நாளான நேற்று பல்வேறுசொகுசு விடுதிகளில் தங்கியிருந்த விளையாட்டு வீரர்கள், சொகுசு பேருந்துகள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன், போட்டி அரங்கத்துக்கு அழைத்துவரப்பட்டனர். வீரர்கள் மற்றும் அவர்களுடன் வந்த நபர்களை, அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யோக நுழைவு வாயில் மூலம் சோதனை செய்த பின்னர், போட்டி அரங்க வளாகத்துக்குச் செல்ல போலீஸார் அனுமதித்தனர்.
மேலும், செஸ் போட்டி அரங்கத்துக்குச் சென்ற வீரர்கள் கடுமையான சோதனைக்குப் பிறகே இருக்கைகளில் அமர அனுமதிக்கப்பட்டனர். மேலும், வீரர்களுடன் வந்த நபர்கள் கையில் கொண்டு வந்த உடமைகளை பாதுகாப்பு வீரர்கள் சோதனை மேற்கொண்டனர். இதன்பின்னரே, போட்டி குழுவினர் அறிவித்த நேரத்தில் போட்டி தொடங்கியது.
முன்னதாக, போட்டியில் பங்கேற்க வந்த வீரர்கள் கூட்டம், கூட்டமாக நின்றிருந்ததால் கிழக்கு கடற்கரை சாலை வண்ணமயமாக காட்சியளித்தது. ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.