லண்டன் டாக்டர் ரிச்சர்ட் புறப்பட்டார்: முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை

லண்டன் டாக்டர் ரிச்சர்ட் புறப்பட்டார்: முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை
Updated on
1 min read

முதல்வருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கிவிட்டு டாக்டர் ரிச்சர்ட் பீலே நேற்று லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு மாதத்துக்கும் மேலாக அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கிலானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் த்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோர் அப்போலோ மருத்துவக் குழுவினருடன் இணைந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர். முதல்வருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கிவிட்டு லண்டன் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

அவர்களின் ஆலோசனைப்படி அப்போலோ மருத்துவமனையின் மூத்த டாக்டர்கள் செயற்கை சுவாச உதவியுடன் முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்க சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்த 2 பெண் பிசியோதெரபி நிபுணர்களில் ஒருவர் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

மற்றொரு நிபுணர் மட்டும் முதல்வருக்கு பிசியோதெரப்பி சிகிச்சை அளித்து வருகிறார். டாக்டர்களின் தொடர் சிகிச்சையால் முதல்வரின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த 23-ம் தேதி 4-வது முறையாக சென்னை வந்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே மூன்று நாட்கள் தங்கி முதல்வரின் உடல்நிலையை பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைகளை அளித்தார். அடுத்தக் கட்டமாக முதல்வருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கிவிட்டு அவர் நேற்று லண்டன் புறப்பட்டுச் சென்றார். அவரது ஆலோசனையின்படி அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினரும் மீண்டும் சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளிக்க இருப்பதாக சொல்லப் படுகிறது. கேரள மாநில முன்னாள் டிஜிபி தினேஷ் ரெட்டி, இந்திய குடியரசு கட்சியின் தமிழக தலைவர் செ.கு.தமிழரசன் உள்ளிட்ட பலர் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல்நிலைப் பற்றி விசாரித்துச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in