Published : 27 Oct 2016 01:12 PM
Last Updated : 27 Oct 2016 01:12 PM

15 ஆண்டுகளுக்கு பிறகு விடிவு காலம்: மின்வாரியத்தில் துப்புரவு பணியாளர்கள் நியமனம்

‘தி இந்து’ செய்தி எதிரொலியால் தமிழக மின்வாரிய அலுவலகங்களில் 15 ஆண்டுகளுக்கு பிறகு, புதிதாக துப்பரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, தமிழகம் முழுவதும் அனைத்து மின்வாரிய அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி தேவைப்படும் பணியாளர் விவரங்களை, தமிழ்நாடு மின்சார வாரியம் கேட்டு வருகிறது.

தமிழகத்தில் 2.5 கோடி மின் நுகர்வோர் இருக்கின்றனர். இவர்களுக்கான மின் உற்பத்தி, விநியோகம், மின் கட்டணக் கணக்கீடு, வசூல் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள, மின்சார வாரியத்தில் 72 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். தமிழகம் முழுவதும் 2,600-க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் உள்ளன. பல அலுவலகங்களில் துப்புரவு பணியாளர்கள் இல்லை. குறிப்பாக 2001-க்குப்பின் தொடங்கப்பட்ட பிரிவு அலுவலகங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. அதனால், கழிப்பறை பராமரிப்பு, தண்ணீர் வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால், மின்வாரிய அலுவலகங்களில் கழிப்பறைகள் பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

இதுதொடர்பாக ‘தி இந்து’வில் கடந்த ஜூலை 7-ம் தேதி விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி அடிப்படையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அனைத்து மாவட்ட தலைமைப் பொறியாளர், மேற்பார்வை பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், பெருக்குதல், கழிவறை சுத்தம் செய்தல் போன்ற பணிகளுக்கு புதிய பகுதிநேர துப்புரவு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதனால், அலுவலகத்துக்கு தேவைப்படும் பணியாளர் குறித்து உடனடியாக கருத்துரு அனுப்புமாறு கேட்டுள்ளனர்.

‘தி இந்து’ செய்தியால் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதால் மின்வாரிய ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x