தி.மலை அருகே உடற்கல்வி ஆசிரியர் இடமாற்றம்; வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் தர்ணா: இடமாற்றத்தை ரத்து செய்த அதிகாரிகள்

திருவண்ணாமலை அருகே வகுப்புகளை புறக்கணித்து நேற்று தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்கள்.
திருவண்ணாமலை அருகே வகுப்புகளை புறக்கணித்து நேற்று தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்கள்.
Updated on
1 min read

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே உடற்கல்வி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து நேற்று வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அடுத்த சொரகொளத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியவர் கணேஷ்பாபு. இவர், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு மாணவர்கள் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். இவர்களது போராட்டத்தை பெற்றோர் மற்றும் கிராம மக்களும் ஆதரித்தனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, “எங்களது பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியவர் கணேஷ்பாபு. இவர் அளித்த பயிற்சியின் காரணமாக மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளோம்.

மேலும், விளையாட்டு குறித்து கிராமத்தின் இளைஞர்களையும் ஊக்கப்படுத்தி வந்தார். இந்நிலையில், அவர் இடமாற்றம் செய்துள்ளது, மாணவர்களின் விளையாட்டுக்கு தடை ஏற்படும். எனவே, எங்களது பள்ளியில், மீண்டும் பணியமர்த்த வேண்டும்” என்றனர்.

இதுப்பற்றி தகவலறிந்த பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் கலசப்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடற்கல்வி ஆசிரியை மீண்டும் நியமிக்கும் வரை போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக மாணவர்கள் தெரிவித்தனர். மேலும் கிராம மக்கள் மற்றும் முக்கியஸ்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிலும் உடன்பாடு எட்டவில்லை.

இதையடுத்து, சொரகொளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியராக கணேஷ்பாபு தொடருவார் என பள்ளி கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அவரும் பள்ளிக்கு திரும்பினார். இதையடுத்து 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்று வந்த மாணவர்களின் தர்ணா முடிவுக்கு வந்தது. அனைவரும் பள்ளிக்கு திரும்பினர். பின்னர், வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in