“எனது உடல்நலத்தை விசாரித்தார்” - பிரதமர் உடனான சந்திப்பு குறித்து ஓபிஎஸ்

“எனது உடல்நலத்தை விசாரித்தார்” - பிரதமர் உடனான சந்திப்பு குறித்து ஓபிஎஸ்
Updated on
1 min read

சென்னை: இரண்டு நாள் தமிழக சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு அகமதாபாத் திரும்பும் பிரதமர் மோடியை வழியனுப்பும் நிகழ்வில் ஓபிஎஸ் கலந்துகொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி, 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்திருந்தார். சென்னை வந்த பிரதமரை தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி,கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் வரவேற்றனர். பாஜக சார்பில் வானதி சீனிவாசன் வரவேற்றார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து வரவேற்றிருந்தார்.

அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை பிரச்சினையைத் தொடர்ந்து இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் பிரதமர் மோடியைச் சந்திப்பதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க இரண்டு தரப்பும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டன. சென்னையில் பிரதமர் மோடி இரண்டு நாள் தங்கியிருந்தாலும் அதுபோன்ற சந்திப்புகள் எதுவும் நடைபெறவில்லை.

இந்நிலையில், இரண்டு நாள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் நேற்று அகமதாபாத் புறப்பட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையம் சென்றடைந்தவர் அங்கிருந்து விமானம் மூலம் அகமதாபாத் சென்றார். பிரதமரை வழியனுப்புவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக நிர்வாகிகள் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். இந்த நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொண்டார். அவரிடம் பிரதமர் சிறிதுநேரம் பேசிய பின்னர் விமானம் ஏறினார்.

இந்த சந்திப்பில் பிரதமர் என்ன பேசினார் என்பதை ஓபிஎஸ் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது வெளிப்படுத்தினார். "கரோனா தொற்றில் இருந்து மீண்டுவந்துள்ளதை அடுத்து உடல்நிலை எப்படி இருக்கிறது என்று பிரதமர் எனது உடல்நலத்தை விசாரித்தார். நன்றாக உள்ளது என்று கூறினேன்" என்று தெரிவித்தார். அப்போது நீதிமன்ற வழக்கு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, "தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும்" என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in