

கோவை: கோவை புத்தக திருவிழாவில் நேற்று ஒரே நேரத்தில் 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் திருக்குறள் வாசிக்கும் நிகழ்வு நடந்தது.
கோவை கொடிசியா வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், கொடிசியா, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும்பதிப்பாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து புத்தக திருவிழாவை நடத்திவருகின்றன. அதன் ஒரு பகுதியாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே இடத்தில் திருக்குறள்களை வாசிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கூறும் போது, “இப்புத்தக திருவிழாவில் 250பதிப்பாளர்கள், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை காட்சிப்படுத்திஉள்ளனர். அதன் ஒருபகுதியாக 400 பள்ளிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் திருக்குறள் பெருந்திரள் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
திருக்குறள் என்பது வரலாற்று சிறப்புமிக்க பொக்கிஷமாகும். சிறப்புபெற்ற திருக்குறளிலிருந்து 20 குறள்களை மாணவர்கள் வாசித்தனர். ஓர்ஆட்சியாளருக்கு தேவையான அனைத்து விதமான கருத்துக்களும் திருக்குறளில் இடம்பெற்றுள்ளன. எனவே, அதில் குறிப்பிட்ட மூன்று திருக்குறள்கள் என்னுடைய அலுவலகத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிகழ்வுக்கு வருகை தந்த மாணவர்கள் புத்தக அரங்குகளை பார்வையிட்டுள்ளனர். மேலும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புத்தக வாசிப்பைஊக்குவிக்கும் வகையில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. அனைத்து மாணவர்களுக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி, கொடிசியா தலைவர் வி.திருஞானம், கோவை புத்தக திருவிழா தலைவர் விஜய் ஆனந்த், துணைத்தலைவர் ரமேஷ்கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாணவர்களுக்கு புத்தக திருவிழா ஏற்பாட்டாளர்கள் சார்பில் வழங்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தில் இருந்த திருவள்ளுவர் படம் காவி நிறத்தில் இருந்தது. இதுதொடர்பாக புத்தக திருவிழா தலைவர் விஜய் ஆனந்த் கூறும்போது, “படம் காவி நிறத்தில் இருந்ததற்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை"என்றார்.