

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த 42-வது பட்டமளிப்பு விழாவில், பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு பிரதமர் மோடி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில், அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்வேறு பாடப்பிரிவுகளிள் முதலிடம் பிடித்த 69 மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பிரதமர் மோடி வழங்கினார். பதக்கம் பெற்ற 69 பேரில் 39 பேர் பெண்கள், 30 பேர் ஆண்கள்.
முன்னதாக பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு பொன்னாடை அணிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் சிலையை நினைவு பரிசாக வழங்கினார். இதேபோல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நினைவுப் பரிசு வழங்கினார்.