Published : 29 Jul 2022 07:34 AM
Last Updated : 29 Jul 2022 07:34 AM
சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக எம்பிக்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற வேண்டும் என்று சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று போட்டியை தொடங்கிவைத்தார். விழா முடிந்த பின்னர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு ஓய்வெடுக்கச் சென்றார். அப்போது அங்கு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டம்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, தமிழக சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்தினர்.
இதில் தமிழக அரசியல் நிலவரம், திமுக அரசின் நடவடிக்கைகள், பிற கட்சிகளின் செல்வாக்கு, அடுத்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ள கட்சிகள், அவற்றின் தற்போதைய நிலை உள்ளிட்டவை குறித்து பாஜக நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, "2024 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் பாஜக எம்.பி.க்கள் வெற்றி பெற்று டெல்லிக்கு வர வேண்டும். அதற்கான பணியை இப்போதே தொடங்க வேண்டும். கீழ்மட்ட அளவில் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை வேண்டும். அதற்கு நிர்வாகிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.
பாஜக அரசின் சாதனைகள்
பாஜக அரசின் 8 ஆண்டு சாதனைகளை தமிழக மக்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்று அறிவுறுத்தியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT