

விருதுநகர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் நேற்று ஒரே நாளில் 40 ஆயிரம் பக்தர்கள் வழிபட்டனர். காட்டாற்று வெள்ளத்தால் 2 ஆயிரம் பக்தர்கள் மலையிலேயே தங்கவைக்கப்பட்டு வெள்ளம் வடிந்ததும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன.
இங்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் பங்கேற்பின்றி விழா நடந்தது.
இந்த ஆண்டு ஜூலை 25முதல் 30-ம் தேதி வரை பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர். மலையில் தங்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என்பதால் மலையடிவாரத்துக்கு இறங்கத் தொடங்கினர். இரவில் திடீரென மழை பெய்ததால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து மலையில் இருந்து பக்தர்கள் அடிவாரத்துக்கு இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் கோயில் பகுதியில்உள்ள கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு கோயில்நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டது. நேற்று அதிகாலை மழைநின்று வெள்ளம் வடிந்ததால் பக்தர்கள் அடிவாரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் காலையிலேயே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வத்திராயிருப்பு விலக்கிலிருந்து தாணிப்பாறை செல்லும் சாலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் பல இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மலைப் பகுதியில் தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த65 காவலர்கள் மற்றும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் சுவாமிக்கு பால், இளநீர், பன்னீர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. நேற்று ஒரே நாளில் 40 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மலையடிவாரத்திலேயே பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தினர்.