ஆடி அமாவாசை | ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடல்

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் நேற்று தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன்
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் நேற்று தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன்
Updated on
1 min read

ராமேசுவரம்/திருச்சி: ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

ஆடி அமாவாசை தினத்தில் புனித தலமான ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய திரள்வார்கள் என்பதால் அக்னி தீர்த்தக் கடற்கரையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

நேற்று முன்தினம் இரவிலிருந்தே தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் வரத் தொடங்கினர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோயிலில் நேற்று அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. காலை 9 மணியளவில் அம்பாள் தங்கப் பல்லக்கில் வீதி உலா வந்தார். பின்னர் ராமநாதபுரம் சமஸ்தான மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதன் பின் காலை 11 மணியளவில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரிக்கு ராமர், சீதா, லட்சுமணர், ஹனுமன் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அக்னி தீர்த்தக் கடல் மற்றும் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடிய பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளும், மதுரையிலிருந்து சிறப்பு ரயிலும் ராமேசுவரத்துக்கு இயக்கப்பட்டன.

இதேபோன்று, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் ஆயிரக்கணக்கானோர் நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in