

கோவை அருகே பெண்ணைத் தாக்கி, அவரது மகளான உதவி பேராசிரியையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட இளைஞருக்கு தூக்குத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள ஆசிரியர் காலனி, கணேஷ் நகரைச் சேர்ந்த தர்மராஜ் மகள் ரம்யா(27), எம்.இ. பட்டதாரி. இவர் கிணத்துக்கடவு அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். ஈச்சனாரியில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்தார்.
இந்நிலையில், கல்லூரி விடுமுறை நாளான 3.11.2014 அன்று காரமடையில் உள்ள தனது வீட்டுக்கு தாயார் மாலதியுடன் வந்துள்ளார். அன்றிரவு 10 மணியளவில் திடீரென இளைஞர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து, மாலதியை உருட்டுக்கட்டையால் தலையில் தாக்கியுள்ளார். அவர் ரத்தக் காயத்துடன் மயங்கி விழுந்துள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த ரம்யாவின் தலையிலும் உருட்டுக்கட்டையால் தாக்கியதால், அவரும் மயங்கி விழுந்துள்ளார். பின்பு மயங்கிய நிலையில் இருந்த ரம்யாவை, அந்த இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் ரம்யா உயிரிழந்தார். பின்பு இருவரும் அணிந்திருந்த ஆறரை பவுன் தங்க நகை மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து காரமடை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் சந்தேகத்தின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டம், தென்காசி பாட்டப்பத் துவைச் சேர்ந்த மகேஷ்(28) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், மாலதியை தாக்கி, அவரது மகள் பேராசிரியை ரம்யாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து, நகை களை கொள்ளையடித்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அத்துமீறி நுழைதல்(499), பாலியல் வன் கொடுமை(376-1), கொலை(302), கொள்ளை(397), கொலை முயற்சி (307) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் அவரை கைது செய்தனர்.
மிகவும் கொடூரமானது
இந்த வழக்கு விசாரணை, கோவை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ராஜா நேற்று தீர்ப்பளித்தார். அதில், அத்துமீறி நுழைதல், பாலியல் வன்கொடுமை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்டவைகளுக்கு தலா ரூ.5,000 வீதம் ரூ.25,000 அபராதமும், மேலும் 4 பிரிவுகளின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையை சமகாலத்தில் அனுபவிக்கவும், கொலை செய்த காரணத்துக்காக மரண தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வயதான பெண்ணை தாக்கியும், தடுக்க வந்த இளம்பெண்ணை தாக்கியோடு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்த சம்பவம் மிகவும் கொடூரமானது என்று நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
தண்டனை விவரங்களை கேட்ட மகேஷ் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் உடனடியாக அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னுதாரணம்
அரசுத் தரப்பு வழக்கறிஞராக வாதாடிய சரோஜினி கூறும்போது, ‘‘கோவை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட இத்தீர்ப்பு மிகவும் வரவேற்கக்கூடியது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இத்தண்டனை பாடமாகவும், முன்னுதாரணமாகவும் இருக்கும்’’ என்றார். குற்றம் சுமத்தப்பட்டவர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் கூறும்போது ‘‘கோவை நீதிமன்றம் அளித்த தூக்குத் தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம்” என்றனர்.