Published : 25 Jun 2014 11:00 AM
Last Updated : 25 Jun 2014 11:00 AM

குற்றாலத்தில் மது, ஆயில், ஷாம்பு, சீயக்காய், சோப்புக்கு நீதிமன்றம் தடை- டாஸ்மாக் கடைகளை 2 நாளில் அகற்றவும் உத்தரவு

குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்கும்போது ஆயில், சோப்பு, ஷாம்பு, சீயக்காய் பயன்படுத்தவும், மதுகுடிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

திருநெல்வேலி, தென்காசி தாலுகாவில் உள்ள குற்றாலத் தில் அடிப்படைத் தேவைகளை செய்து கொடுக்கவும், சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிடக் கோரி ஆர்.கிருஷ்ணசாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன் 33 விதமான அறிவுறுத்தல்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட் டோருக்கு தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:

குற்றால அருவிகளில் குளிக்கும் போது ஆயில், ஷாம்பு, சோப்பு, சீயக்காய், பிளாஸ்டிக் பொருட் கள் பயன்படுத்தவும், துணிகள் துவைக்கவும் தடை விதிக்கப் படுகிறது. குற்றாலம் அருவிப் பகுதியில் மேற்கண்ட பொருட்களை விற்கவும் தடை விதிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பொருட்களை யாரும் எடுத்துச் செல்லாமல் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

24 மணி நேரத்தில் சாலை விளக்குகளை அமைக்கவேண்டும்.

அருவிப் பகுதிகளிலும், பஸ் நிலையத்திலும் கூடுதலாக கழிப்பறைகள் கட்ட வேண்டும். பெண்கள் கழிப்பறை மற்றும் ஆடை மாற்றும் இடத்தில் பெண்களை மட்டுமே வேலைக்கு நியமிக்க வேண்டும். கழிப்பறைக் கழிவுகள் ஆற்றில் கலப்பதை 24 மணி நேரத்தில் தடுக்க வேண்டும்.

அருவி அருகே உள்ள ஆடை மாற்றும் அறைகள் சிலவற்றுக்கு கதவுகள் இல்லை. மின்விளக்கும் இல்லை. எனவே, கூடுதலாக ஆடை மாற்றும் அறைகள் கட்ட வேண்டும்.

சீசன் காலத்தில் சேரும் குப்பை களை அப்புறப்படுத்த குறைந்த பட்சம் 50 துப்புரவுப் பணியாளர் களையாவது குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம் நியமிக்க வேண்டும்.

குற்றாலம் அருவி பகுதி களில் திறந்த வெளியில், சாலை யோரத்தில், காரில் இருந்தபடி மது அருந்துவதற்கு தடை விதிக்கப் படுகிறது. அவ்வாறு அங்கே மது அருந்துவோரிடம் இருந்து மதுபானங்களைப் போலீஸார் பறிமுதல் செய்ய வேண்டும். அவர்களுக்கு அபராதமும் விதிக்க வேண்டும். வழக்கு பதிவு செய்வதில் இருந்து அவர்கள் தப்பிக்காமல் இருப்பதற்காக அவர்களை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.

பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு அருவிகளுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை 48 மணி நேரத்துக்குள் அப்புறப்படுத்தி, அருவிக்கு தொலைவில் கொண்டு போகச் செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளில் விரைவில் பார் வசதி செய்து தர வேண்டும்.

சீசன் காலத்தில் 24 மணி நேரமும் மருத்துவ சேவை கிடைக்கச் செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். சீசன் காலத்தில் குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அருவிப் பகுதிகளுக்கு வந்து செல்லும் ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் வீடு திரும்புவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x