அடையாறு ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
சென்னை: அடையாறு ஆற்றங்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை கொரட்டூரைச்சேர்ந்த சிட்டிசன் ஃபோரம் என்ற அமைப்பின் நிர்வாகி கிருஷ்ணகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை இரும்புக்கரம்கொண்டு தடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அடையாறு ஆற்றின் கரைப்பகுதி ஆக்கிரமிப்பால், மழைக் காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.
இதனால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒக்கியம் துரைப்பாக்கத்தில் மாற்று இடம் தரும் திட்டம் கொண்டுவரப்பட்டும் அது முழுமையாக அமல்படுத்தவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், "கூவம் மறுசீரமைப்பு அறக்கட்டளை மூலம் மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தடை உத்தரவு இல்லாத இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளோடு இந்த வழக்கையும் சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.
