

பிஎம் கிசான் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் வரும் 31-ம் தேதிக்குள் தங்கள் பதிவை புதுப்பிக்க வேண்டும் என ஈரோடு வேளாண் இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், நிலம் உள்ள விவசாயிகளுக்கு, வேளாண் இடுபொருட்களுக்கான ஊக்கத் தொகையாக, 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம், ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 95 ஆயிரத்து 354 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் இதுவரை 11 தவணைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இத்திட்டத்தில் இதுவரை வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நிதி விடுவிப்பு செய்து வந்த நிலையில், 12-வது தவணைத் தொகையானது, ஆதார் எண் அடிப்படையில் விடுவிக்கப்படும். எனவே, ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதத்துக்கான 12-வது தவணைத் தொகையை பெற, பிஎம் கிசான் வலைதளத்தில் (www.pmkisan.gov.in) ஆதார் விவரங்களை சரிபார்த்து உறுதி செய்வது, வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாகும்.
இதுவரை ஆதார் எண்ணுடன், செல்போன் எண்ணை இணைக்காதவர்கள் பொதுசேவை மையங்கள் மூலம் இணைத்திட வேண்டும். மேலும், வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள், உதவித்தொகை பெறும் வங்கிக்குச் சென்று ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வேளாண் இணை இயக்குநர் சி.சின்னசாமி தெரிவித்துள்ளார்.