Last Updated : 28 Jul, 2022 09:05 AM

 

Published : 28 Jul 2022 09:05 AM
Last Updated : 28 Jul 2022 09:05 AM

மருதமலை முருகன் கோயிலில் ரூ.6.45 கோடியில் 2 ‘லிப்ட்’ அமைக்க அரசுக்கு கருத்துரு

மருதமலை முருகன் கோயில் ராஜ கோபுரத்துக்கு செல்லும் படிக்கட்டுப் பாதை. (கோப்பு படம்)

மருதமலை முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ‘லிப்ட்’ அமைக்க கருத்துரு தயாரித்து அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முடி காணிக்கை மண்டபம், பன்னடுக்கு வாகன நிறுத்தகம், சாலை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட உள்ளன.

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் கோவை மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலும் ஒன்று. கோவை மட்டுமின்றி, சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர். அடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு பக்தர்கள் வர மலைப்பாதை மற்றும் படிக்கட்டுப் பாதை ஆகிய இரண்டு வழித்தடங்கள் உள்ளன. பொதுப் போக்குவரத்து வாகனங்களில் வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து கோயில் பேருந்து மூலம் மேலே அழைத்துச் செல்லப்படுகின்றனர். சொந்த வாகனத்தில் வரும் பக்தர்கள் நேரடியாக கோயிலுக்கு செல்கின்றனர். தவிர, படிக்கட்டுகள் வழியாக நடந்தும் பக்தர்கள் செல்கின்றனர்.

மேலே சென்றபிறகு, நூற்றுக்கும் மேற்பட்ட படிக்கட்டுகளை கடந்து கோயிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் வயதான பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.

பக்தர்கள் கூறும்போது, “2.50 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மலைப்பாதை, கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் சீரமைக்கப்பட்டது. தற்போது ஆங்காங்கே சாலை சேதமடைந்து காணப்படுகிறது. மலைப்பாதையை சீரமைக்க வேண்டும். கூடுதல் வாகனங்களை நிறுத்தும் வகையில் ‘பல அடுக்கு வாகன நிறுத்தகம்’ ஏற்படுத்த வேண்டும். கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். முடி காணிக்கை செலுத்தும் மண்டபத்தை விரிவுபடுத்த வேண்டும். வயதானவர்களுக்கு உதவும் வகையில் ‘லிப்ட்’ வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்’’ என்றனர்.

இதுதொடர்பாக, மருதமலை முருகன் கோயிலின், இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஹர்ஷினி ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

மருதமலையில் வயதான பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய ரூ.6 கோடியே 45 லட்சம் மதிப்பில் ‘லிப்ட்’ அமைக்க கருத்துரு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ராஜகோபுரம் படிக்கட்டை ஒட்டி, வாகன நிறுத்தகம் அருகே 2 லிப்ட் அமைக்கப்படும். அங்கிருந்து 12 மீட்டர் உயரத்துக்கு லிப்ட் மேலே சென்ற பின்னர், அங்கிருந்து 40 மீட்டர் தூரம் பக்கவாட்டுப் பகுதியில் பக்தர்கள் நடந்து வந்து, மற்றொரு லிப்ட்டில் ஏறி 8 மீட்டர் தூரம் மேலே சென்று கோயிலுக்குச் செல்லும்வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு லிப்டிலும் ஒரே சமயத்தில் தலா 20 பேர் செல்லலாம்.

அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு தகுந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் ஒப்படைக்கப்படும். கோயிலின் அடிவாரத்தில் 93 சென்ட் பரப்பளவில் ரூ.89 லட்சம் மதிப்பில் முடி காணிக்கை மண்டபம் கட்டப்பட உள்ளது. ஒரே நேரத்தில் 50 பேர் முடிகாணிக்கை அளிக்கலாம். இதற்கான பணி ஆணை ஒப்பந்த நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டும் பணி தொடங்கப்படும்.

மருதமலை கோயிலின் மலைப்பாதை ரூ.3.56 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட உள்ளது. கோயிலில் இட நெருக்கடியின்றி வாகனங்களை நிறுத்த ஏதுவாக, மலையின் மீது ஒரே சமயத்தில் 200 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் பன்னடுக்கு வாகன நிறுத்தகம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. மலையில் பக்தர்களின் வசதிக்காக கழிப்பிடமும் கட்டப்பட உள்ளது,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x