Published : 28 Jul 2022 09:00 AM
Last Updated : 28 Jul 2022 09:00 AM

கோவையில் ஆதரவற்றோர் கடத்தப்பட்ட விவகாரம்: காப்பகங்களை முறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்

கோவையில் அனுமதியின்றி இயங்கும் காப்பகங்களை முறைப்படுத்த வேண்டும், என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை தொண்டாமுத்தூர் பகுதிக்குட்பட்ட அட்டுக்கல் என்ற கிராமத்தில் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தை அரசு அதிகாரிகள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பூட்டி ‘சீல்’ வைத்துவிட்டனர்.

இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, திமுக கவுன்சிலர் உதவியோடு அந்த கிறிஸ்தவ தேவாலயம் மீண்டும் புனரமைக்கப்பட்டு, அண்மையில் அவர் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. கருணை பயணம் என்ற ஆதரவற்ற, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகமாக இது செயல்படுவதாக கூறப்படுகிறது.

இதில், சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அண்மை யில் தொண்டாமுத்தூர் பகுதியில் சாலையில் நடந்துசென்ற முதியோரை வற்புறுத்தி காப்பக வாகனத்தில் ஏற்றியதை கண்ட கட்சித்தொண்டர்கள், அந்த வாகனத்தைகாவல்துறை உதவியோடு இடைமறித்து விசாரித்துள்ளனர். அப்போது, தங்களை வலுக்கட்டாய மாக இழுத்து வந்ததாகவும், அழைத்து வந்தபின் தங்களை உடமைகள், ஆதார் அட்டை, மற்றஅடையாள அட்டைகளை எரித்துவிட்டதாகவும், கேள்வி எழுப்பினால் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப் பட்டதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ள்ளனர்.

இதை பாஜகவினர் காவல்துறையினர் கவனத்துக்கு கொண்டு சென்ற தகவல் அறிந்த காப்பக உரிமையாளர்கள், சுமார் 92 பேரை ஒரு வாகனத்தில் ஏற்றி ஆங்காங்கே இறக்கிவிட்டு தப்பிச் சென்றதாக தெரியவந்துள்ளது. இந்த மோசடி கும்பலுக்கும், திமுகவினருக்கும் என்ன தொடர்பு என்பதை காவல்துறை தீர விசாரிக்க வேணடும். உடல் உறுப்புகளை கடத்தி விற்கும் கும்பலுக்கும், இவர்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்த வேண்டும்.

அனுமதி இல்லாமல் இயங்கிவரும் இதுபோன்ற காப்பகங்களை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x