தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பா? - ஈரோட்டில் 2 இளைஞர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த இளைஞரை ஆர்.என்.புதூரில் உள்ள போலீஸ் குடியிருப்பு வளாகத்துக்கு அழைத்துவந்து என்ஐஏ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். இதனால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த இளைஞரை ஆர்.என்.புதூரில் உள்ள போலீஸ் குடியிருப்பு வளாகத்துக்கு அழைத்துவந்து என்ஐஏ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். இதனால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Updated on
1 min read

ஈரோடு: அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக பெங்களூருவில் கைது செய்யப்பட்டவர் அளித்த தகவலின்பேரில், ஈரோட்டில் 2 இளைஞர்களிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கியிருந்த அக்தர் உசேன் லஸ்கர் என்பவர் கடந்த 24-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தினருடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

அவர் கொடுத்த தகவல் அடிப்படையில், சேலத்தில் வசித்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அப்துல் அலிம் முல்லா என்பவர், கடந்த 25-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அக்தர் உசேன் அளித்த தகவலின்பேரில், ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியில் வசித்து வந்த ஒரு குடும்பத்தினரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். உள்ளூர் போலீஸார் பாதுகாப்புடன் நள்ளிரவு வரை விசாரணை நடந்தது.

பின்னர், அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை மட்டும் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் வைத்து அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அதில் கிடைத்த தகவல் அடிப்படையில், அந்த இளைஞரின் நண்பர் ஒருவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

அவர்கள் இருவரிடமும் நேற்று இரவு வரை விசாரணை தொடர்ந்தது. விசாரணை நடக்கும் போலீஸ் குடியிருப்பு வளாகத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிடிபட்ட இளைஞரிடம் இருந்து ஸ்மார்ட் போன்கள், லேப்டாப், டைரிகள், சிம்கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அதில் உள்ள தகவல்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, மாணிக்கம்பாளையத்தில் உள்ள இளைஞரின் வீட்டை சுற்றியுள்ள வீடுகளில், ஈரோடு மாவட்ட போலீஸார் நேற்று தனியாக விசாரணை மேற்கொண்டனர். குறிப்பிட்ட இளைஞரின் வீட்டுக்கு யார், யார் வந்து செல்வர், அவர்களது நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in