Published : 28 Jul 2022 03:52 AM
Last Updated : 28 Jul 2022 03:52 AM
ராமேசுவரம்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் குடும்பத்தினரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கடந்த 2015 ஜூலை 27-ம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நடந்த கல்லூரி விழாவில் பேசிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்ட தேசிய நினைவகத்தை 2017-ல் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அப்துல் கலாமின் 7-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள நினைவிடத்தில் கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதீன், மகள் நசிமா மரைக்காயர், பேரன்கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம், ஆவுல் மீரா மற்றும் குடும்பத்தினர் இஸ்லாமிய முறைப்படி சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.
அரசு சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அஞ்சலி செலுத்தினார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம், முருகேசன், கலாமின் முன்னாள் உதவியாளர் பொன்ராஜ் மற்றும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், சுற்றுலாப் பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
கலாமின் அண்ணன் பேரன் ஷேக் சலீம் கூறும்போது, “அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தில் உள்கட்டமைப்புகளை தவிர, மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. குறிப்பாக, அறிவுசார் மையம், டிஜிட்டல் நூலகம், தொழில்நுட்ப கண்காட்சியகம், அறிவியல் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை அமைக்க வேண்டும்” என்றார்.
அமித்ஷா புகழாரம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விடுத்துள்ள செய்தியில், ‘வலுவான இந்தியாவை உருவாக்குவதற்காக கலாம் தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார். கலாமின் எண்ணங்களும், சிந்தனைகளும் நாட்டு மக்களுக்கு எப்போதும் வழிகாட்டும்’ என புகழாரம் சூட்டியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT