

சில விதைப்பண்ணைகள், ஜவ்வரிசி ஆலைகள் ஆகியவற்றில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவு நீரால், வசிஷ்ட நதி, ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் மாசடைந்து வருவதைத் தடுக்கக்கோரி, தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோரிக்கை மனு தொடர்பாக கிராம ஊராட்சித் தலைவர்கள் கூறியதாவது:
தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இடங்களில் செயல்பட்டு வரும் சில விதைப்பண்ணைகள், ஜவ்வரிசி உற்பத்தி தொழிற்சாலைகள், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வசிஷ்ட நதி மற்றும் அதனைச் சேர்ந்த ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கலக்கவிடுகின்றன. மேலும், தொழிற்சாலை அருகிலேயே ரசாயனக் கழிவு நீரை குளம் போல தேக்கி வைப்பதால், நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.
இதனால், ஏரிகள், கிணறுகள், நிலத்தடி நீர் உள்ளிட்ட நீர் நிலைகள் பாதிக்கப்படுகின்றன. மேலும், வசிஷ்ட நதி, ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் உள்ள மீன்களும் கொத்து கொத்தாக இறந்து, நீர் நிலைகளை கால்நடைகள் கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. தலைவாசலை அடுத்த மணிவிழுந்தான் காலனி கிராமத்தின் ஏரியில் மீன்கள் ஏராளமாக இறந்து மிதப்பது, இதற்குச் சான்று.
இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் புகார்கள் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ஜவ்வரிசி தொழிற்சாலைகள் உள்பட பிற தொழிற்சாலைகள் அனைத்திலும், சுத்திகரிக்கப்படாத ரசாயனக் கழிவு நீர் வெளியேற்றப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும். நீர் நிலைகள் மாசடைந்தால், அதனை ஒட்டிய தொழிற்சாலைகளையே பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். மாசடைந்த நீர் நிலைகளை உடனடியாக தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.