Published : 28 Jul 2022 06:42 AM
Last Updated : 28 Jul 2022 06:42 AM

பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை உயர்வு: 900 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க மாநகராட்சி முடிவு

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதற்கு ஏற்றவாறு ஆசிரியர்களின் எண்ணிக்கையை உயர்த்த சுமார் 900 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. தனியார் பள்ளிகள் அதிகரிப்பு, ஆங்கில வழிக் கல்வி மீதான ஈர்ப்பு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து, மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 83 ஆயிரம் வரை வந்துவிட்டது. அதற்கு ஏற்றவாறு ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது.

இந்நிலையில் கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு நடவடிக்கைகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்ததால், கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல், தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளை சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கத் தொடங்கியுள்ளனர் இதன் காரணமாக மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2020-21 கல்வியாண்டில் ஒரு லட்சத்தை கடந்தது.

கடந்த 2010-11 கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 320 ஆக இருந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இந்தஆண்டு ஒரு லட்சத்து 7 ஆயிரமாக மாணவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.

இதற்கு ஏற்றவாறு ஆசிரியர்களின் எண்ணிக்கையை உயர்த்த மாநகராட்சி திட்டமிட்டிருந்தது.

அது தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது. அதில் மாநகராட்சி பள்ளிகளில் தற்போது உள்ள மாணவர்களுக்கு ஏற்றவாறு எவ்வளவு ஆசிரியர்கள் தேவை என ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, 900 ஆசிரியர்கள் தேவை என்பது தெரியவந்தது.

இந்த ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமிப்பது எனவும், இது தொடர்பாக மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பள்ளி மேலாண்மைக் குழுக்களின் ஒப்புதல் அடிப்படையிலேயே இந்த ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x