Published : 28 Jul 2022 07:41 AM
Last Updated : 28 Jul 2022 07:41 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இன்று நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வரும் விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் கரோனா மற்றும் குரங்கு அம்மைதொற்று பரிசோதனை கட்டாயம்மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரம் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்குகள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தங்கும் சொகுசுவிடுதிகளில் சுகாதாரத் துறைமேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகளை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை செயலாளர் செந்தில்குமார், உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் லால்வின், மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் உட்பட அரசுத்துறைகள் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: வெளிநாட்டு வீரர்கள் தங்கும் 21 விடுதிகளில் உணவு தயாரிப்பு மற்றும்விநியோகப் பணிகளை கண்காணிப்பதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், விளையாட்டு வீரர்கள் மற்றும் வெளிநாட்டினர் மாமல்லபுரத்தில் உள்ள கலைச்சின்னங்களை கண்டு ரசிக்கும்போது தரமான உணவு வழங்க 51 உணவகங்கள் மற்றும் 66 நடைபாதைக் கடைகள் உரிய அறிவுறுத்தல்களோடு அமைக்கப்பட்டுள்ளன.
டெங்கு, மலேரியாவை ஒழிக்கும் வகையில் சுகாதாரத் துறை பணியாளர்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. விடுதிகள்மற்றும் போட்டி அரங்கம் ஆகியபகுதிகளில் 30 ஆம்புலன்ஸுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வீரர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக தமிழக அரசு சார்பில் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்துக்கு வரும் அனைவருக்கும் கரோனா மற்றும் குரங்கு அம்மைபரிசோதனை கட்டாயம் செய்யப்படும். உடல் வெப்ப பரிசோதனைக்குப் பின்னரே, போட்டி அரங்கம் மற்றும் அரங்க வளாகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். அனைத்துவகை மருத்துவ முறையிலும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. யோகா பயிற்சி அளிப்பதற்கான பயிற்சியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு மருத்துவர்களும் உள்ளனர்.
விளையாட்டு வீரர்கள் தங்களின்அவசர காலங்களில் மருத்துவர்களை தொடர்பு கொள்ள வசதியாக தகவல் புத்தகம் மேஜையில் வைக்கப்படும். மேலும், 2 ஆயிரம் வீரர்களுக்கு காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நட்பு வாகனங்கள்
மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் வசதிக்காக 5 பேருந்துகள் மற்றும் 25 ஆட்டோகள் நட்பு வாகனங்களாக சுற்றுலாத்துறை சார்பில் இயக்கப்படுகின்றன. இவற்றை அமைச்சர் மதிவேந்தன் நேற்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து, செய்தியாளர்களை சந்தித்து சுற்றுலாத் துறைஅமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது: வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள், மத்திய கைலாஷ் பகுதி முதல் மாமல்லபுரம் வரையில் இயக்கப்படும் நட்பு வாகனங்களில் இலவசமாக பயணிக்கலாம்.
சுற்றுலாத் துறை வடிவமைத்துள்ள ஆட்டோக்கள் மாமல்லபுரம் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு இயக்கப்படும். ஆட்டோக்களில் குறைந்த கட்டணமே வசூலிக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT