Published : 28 Jul 2022 06:59 AM
Last Updated : 28 Jul 2022 06:59 AM

தமிழக அரசின் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களின் மீது பாஜகவினர் ஒட்டிய பிரதமர் படம் மீது கருப்பு பெயின்ட் அடித்ததற்கு எதிர்ப்பு

பிரதமர் மோடியின் புகைப்படத்தில் கருப்பு பெயின்ட் அடித்ததாக பிடிபட்ட பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சசி குமார், பார்த்தசாரதி, அரவிந்த்.

சென்னை: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், நடைபெற உள்ள சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத் தொடர்ந்து, இந்த விளம்பரங்களில், பிரதமர் மோடியின் படத்தை பாஜகவினர் நேற்று ஒட்டி, மத்திய அரசு சார்பில்தான் தமிழகத்தில் சர்வதேச செஸ்ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படுகிறது எனவும், தமிழக அரசுஇதில் பிரதமரின் படங்களை புறக்கணித்திருப்பது கண்டனத்துக் குரியது என்றும் தெரிவித்தனர்.

மேலும், தமிழகம் முழுவதும் இதுபோன்ற விளம்பரங்களில் பிரதமரின் படங்களை ஒட்டுவதற்கும் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில், சென்னை அடையாறு உள்ள பல்வேறு பகுதிகளில் தமிழக அரசின் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பாஜகவினர் ஒட்டிய பிரதமர் மோடி படத்தின் மீது சிலர் நேற்று கருப்பு பெயின்ட் அடித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் தி.நாராயணன் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் நடைபெறும் சர்வதேச செஸ் போட்டி குறித்து தமிழக அரசின் விளம்பரங்களில் பிரதமரின் படம் இடம்பெறாதது திமுக அரசின் குறுகிய மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. உலகமே போற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு விளம்பரம் தேவையில்லை. ஆனால், சர்வதேச அளவில் நடைபெறும் ஒரு விழாவில், நாட்டின் பிரதமருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் காந்தி மண்டபம் பேருந்து நிறுத்தத்தில் செஸ்ஒலிம்பியாட் விளம்பர பதாகையில், ஒட்டப்பட்ட பிரதமரின் புகைப்படத்தில் கறுப்பு பெயின்ட் அடித்ததாக பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மயிலாப்பூர் சாரதாபுரம் சசிகுமார் (36), ராயப்பேட்டை முத்தையா 1-வது தெருவைச் சேர்ந்த பார்த்த சாரதி (34), அண்ணா சாலை பார்டர் தோட்டம் அரவிந்த் (28) ஆகிய 3 பேரை கோட்டூர்புரம் போலீஸார் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

சசிகுமார் கறுப்பு பெயின்ட் அடிக்க மீதமுள்ள இருவரும் அதை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளோம் என போலீஸார் தெரிவித்தனர்.

இதுஒருபுறம் இருக்க சென்னை மாநகர பேருந்து நிறுத்தங்களில் ஒட்டப்பட்டுள்ள செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களை உருமாற்றம் செய்தும், சிதைத்தும் படங்களை ஒட்டியுள்ள பாஜகவைச் சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் துரை அருண் என்பவர் நேற்று புகார் அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x