

10 ஆண்டுகளாக தங்கள் வசமில்லாத பரமக்குடி நகராட்சித் தலைவர் பதவியை இம்முறை கைப்பற்றியே தீருவது என்ற முனைப்புடன் திமுக களமிறங்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக் குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. 75,540 வாக்காளர்கள் உள்ளனர். இங்குள்ள வார்டுகளில் 25, 27, 28 ஆகியவை ஆதிதிராவிடர் பெண்களுக்கும், 3, 7, 10, 16, 17, 18, 20, 23, 24, 26, 29, 30, 34, 35, 36 ஆகியவை பெண்கள் பொதுப்பிரிவினருக்கும் என பெண்களுக்கு மொத்தம் 18 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 18 வார்டுகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. நகராட்சித் தலைவர் பதவி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி தொடர்ந்து 2 முறை நகராட்சி தலைவராக இருந்தார். இவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நகராட்சித் தலைவர் பதவியை ராஜினமா செய்தார். அதனால் துணைத்தலைவராக உள்ள ஜெய்சங்கர் தற்போது நகராட்சி தலைவராக உள்ளார்.
தற்போது நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றவதில் அதிமுக, திமுகவினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதிமுகவில் மாவட்டச் செயலாளராக உள்ள எம்.ஏ.முனியசாமி (கீர்த்திகாவின் கணவர்), நகரசபை உறுப்பினராக உள்ள மாலிக், அதிமுக நகர் செயலாளராக உள்ள ஜமால் ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது. இதில் மாவட்டச் செயலாளராக உள்ள எம்.ஏ.முனியசாமிக்கு வாய்ப்பு அதிகம் என கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
திமுக தரப்பில் தற்போதைய நகர் செயலாளர் சேது கருணாநிதி, நகராட்சி தலைவர் பதவிக்கு முயற்சித்து வருகிறார். இக்கட்சியில் பெரிய அளவில் போட்டி இல்லை.
பரமக்குடி நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டம் நிறை வேற்றப்படவில்லை. நகரின் பெரும்பாலான கழிவுநீர் வைகை ஆற்றில் விடப்பட்டு சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.
10 ஆண்டுகள் நகராட்சித் தலைவராக இருந்த கீர்த்திகா முனியசாமி, வைகையாற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என பொதுமக்களிடையே அதிருப்தி நிலவுகிறது. இது தொடர்பாக தீவிர பிரச்சாரம் செய்து அதிக வாக்குகளை பெற்று நகராட்சியை கைப்பற்ற திமுகவினர் திட்ட மிட்டுள்ளனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நெசவாளர்கள், வியாபாரிகள் அதிகம் உள்ள இந்த நகராட்சியை இந்த முறை கைப்பற்றியே தீருவது என்ற முனைப்புடன் திமுக களமிறங்கியுள்ளது.
இதற்காக, அதிமுகவுக்கு எதிராக உள்ள சில கட்சியினரிடம் மறைமுகமாக ஆதரவு கோரி வருவதாகவும் கூறப்படுகிறது. மறுபுறம் ஆளுங்கட்சி என்ற பலத்துடன் அதிமுக களமிற ங்குகிறது. வெல்லப் போவது யார் என்பது இன்னும் நான்கு வாரங்களில் தெரிந்துவிடும்.