சென்னை வந்தடைந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி

சென்னை வந்தடைந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி
Updated on
1 min read

சென்னை: சென்னையில் இன்று முதல் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி, நேற்று சென்னை வந்தடைந்தது. இதற்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடி கடந்த மாதம் 19-ம்தேதி டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்த ஜோதி நாடு முழுவதும் திருப்பதி, திருவனந்தபுரம், புவனேஸ்வர் உள்ளிட்ட 75 நகரங்களில் பயணித்து, கடந்த 25-ம் தேதி தமிழகத்தை அடைந்தது. தமிழகத்தில் முதலில் கோவை வந்த ஜோதி, மாநிலத்தின் பல்வேறு நகரங்கள் வழியாக நேற்று சென்னை வந்தடைந்தது.

இதே போல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செஸ்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏற்றப்பட்ட ஜோதியும் சென்னை எடுத்து வரப்பட்டிருந்தது.

இவை அனைத்தும் சென்னை, மாநிலக் கல்லூரி மைதானத்தில் சங்கமிக்கப்பட்டன. இதையடுத்து ஒலிம்பியாட் ஜோதியை செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்திடம், சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஒப்படைத்தார். தொடர்ந்து அந்த ஜோதியை திறந்த வெளி வாகனத்தில் விஸ்வநாதன் ஆனந்த் ஊர்வலமாக எடுத்துச் சென்றார்.

அவரைப் பின் தொடர்ந்து நூற்றுக்கணக்கான வாகனங்களில் என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களும் அணிவகுத்துச் சென்றனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் அவரை உற்சாகப்படுத்தினர். அரசுசார்பில் பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நிறைவாக ஒலிம்பியாட் ஜோதியை அவர் சென்னை, எழும்பூர் நேரு விளையாட்டு அரங்கில் கொண்டு சேர்த்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் விஸ்வநாதன் ஆனந்த் கூறியதாவது: ஒலிம்பியாட் ஜோதியை ஏந்தி வந்தது நிச்சயம் மறக்கமுடியாத அனுபவம். கடந்த 2000-ம்ஆண்டு நான் உலகளவில் சாதனை படைத்தபோது நடந்தபேரணியை விட இது பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஊர் முழுவதும் ஒரு பேரணி நடத்தி, மக்கள் அனைவருக்கும் போட்டி குறித்த தகவல்களை எடுத்துரைத்து சிறப்பாக நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதே போல் ஏற்பாட்டை நான் இதுவரை பார்த்ததில்லை.

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியால் தான் செஸ் மீதான ஆர்வம் ஏற்பட்டது என அடுத்த 10 ஆண்டுகளில் உருவாகும் வீரர்கள் அனைவரும் கூறுவர். செஸ் போட்டிகளில் இந்தியர்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்னும் மேக்னஸ் கார்ல்சென் கருத்தை ஏற்கிறேன்.

ஜெயித்த பிறகு கொண்டாடுவோம்

190 அணிகள் பங்கேற்கும் போட்டி நடப்பது இதுவே முதல் முறை. சவாலான அணிகள் இருப்பதால் ரஷியா போன்ற ஓரிரு நாடு பங்கேற்காததால் பெரிய வித்தியாசம் இருக்காது.

முதலில் போட்டிகளில் களமிறங்குவோம். ஜெயித்த பிறகு கொண்டாடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்வில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சிவ.வீ.மெய்யநாதன், எம். மதிவேந்தன், சட்டப்பேரவை உறுப்பினர் த.வேலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in