Published : 28 Jul 2022 07:23 AM
Last Updated : 28 Jul 2022 07:23 AM
சென்னை: தமிழகத்துக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட 2021-ம்ஆண்டுக்கான புத்தொழில் சூழமைவுக்கான லீடர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: டெல்லியில் கடந்த ஜூலை 4-ம் தேதி மத்திய அரசின் தொழில் முன்னேற்றம் மற்றும் உள்நாட்டு வணிகத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மாநிலத்தில் புத்தொழில் சூழலை வலுப்படுத்தும் நோக்கில், புத்தொழில்நிறுவனங்களுக்கு ஆதரவான செயல்பாடுகளை முன்னெடுத்ததற்காக தமிழகத்துக்கு லீடர் விருது வழங்கப்பட்டது.
முந்தைய ஆண்டுகளில் புத்தொழில் சூழமைவில் வளர்ந்துவரும் மாநிலம் என்ற நிலையில் இருந்து, தற்போது லீடர் நிலைக்கு தமிழகம் முன்னேறியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், தமிழகத்துக்கு கிடைத்த லீடர் விருதை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்வின்போது தலைமைச் செயலர் வெ.இறையன்பு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலர் வி.அருண்ராய், தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்க நிர்வாக ஆணையர் எஸ்.நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT