

சென்னை: மத்திய அரசின், இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) சென்னை கிளை- I சார்பில், “1500 வோல்ட் டிசி மதிப்பிடப்பட்ட ஒளி மின்னழுத்தம் சம்பந்தப்பட்ட மின்சார கேபிள்கள்" என்ற தலைப்பில் தொழில்துறையினருக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியை நேற்று நடத்தியது.
இதில், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் விஞ்ஞானிகள் ஜோஸ் சார்லஸ், ஜோஸ்த்னாபிரியா, ஆகியோர் தொழில் துறையினருடன் கலந்துரையாடினர்.
தரநிலைகள் வெளியீடு
அப்போது, அவர்கள் பேசும்போது, ‘‘சோலார் கேபிள் என்பது ஒளி மின்னழுத்த மின்உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஒன்றோ டொன்று இணைக்கும் கேபிள் ஆகும். சூரிய மின்சக்தி விநி யோகத்தில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. கிரிட் இணைக்கப்பட்ட சோலார் ஆலைகளை இயக்குவதற்கான தரநிலைகள் மற்றும் விவரக் குறிப்புகளை வெளியிட்டுள்ளது.
மின்சார கேபிள்கள்
இதன்படி, 1,500 வோல்ட் மதிப்பிடப்பட்ட ஒளி மின்னழுத்தம் சம்பந்தப்பட்ட மின்சார கேபிள்கள் ஐஎஸ் 17293:2020 என்ற தரத்துக்கு இருக்க வேண்டும்’’ என வலியுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், மின்சார கேபிள் உற்பத்தியாளர்கள், தொழில் சங்கங்களின் உறுப்பினர்கள், இந்துஸ்தான் வர்த்தக சபை, இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.