

தமிழகத்தில் ஆதார் பதிவு பணிகளை நாளை (அக்டோபர் 1) முதல் தமிழக அரசே மேற் கொள்வதாக ஆதார் அட்டை ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசு நலத்திட்டங்கள் உரியவர் களை மட்டுமே சென்று சேர்வதை உறுதிசெய்யும் நோக்கில், நாடு முழுவதும் அனைவருக்கும் பொது அடையாள எண் வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 2010 முதல் பிரத்யேக ஆதார் எண்ணுடன் கூடிய ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக அமைக்கப்பட்ட யுஐடிஏஐ (யுனிக் ஐடென்டிஃபி கேஷன் அதாரிட்டி) ஆணையம், நாடு முழுவதும் நேரடியாக ஆதார் பதிவுகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் அடிப்படையில், மத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவல கம் சார்பில் ஆதார் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, யுஐடிஏஐ மூலமாக ஆதார் எண் வழங்கப்படுகிறது. இந்நிலையில், அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆதார் பதிவு பணிகளை தமிழக அரசே மேற்கொள்ள உள்ளது.
இதுகுறித்து யுஐடிஏஐ அலுவலக உயரதிகாரிகள் கூறியதாவது:
6.44 கோடி பேருக்கு ஆதார்
2015-ம் ஆண்டு தேசிய மக்கள் தொகை பதிவேட்டு விவரங்களின் படி, தமிழகத்தில் 7 கோடியே 64 லட்சத்து 75 ஆயிரத்து 852 பேர் வசிக்கின்றனர். இதில், கடந்த செப்டம்பர் 20-ம் தேதி நிலவரப்படி 6 கோடியே 44 லட்சத்து 92 ஆயிரத்து 854 பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. 1 கோடியே 19 லட்சத்து 82 ஆயிரத்து 998 பேருக்கு வழங்க வேண்டியுள்ளது.
யுஐடிஏஐ ஆணையம் அனுமதி
ஆதார் பதிவு செய்ய மத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகத்துக்கு தமிழக அரசு வழங்கிய அனுமதி செப்டம்பர் 30-ம் தேதியுடன் (இன்று) நிறைவடைகிறது. இந்த நிலையில், தமிழக அரசிடம் உரிய கட்டமைப்பு வசதிகள் இருப்பதால், ஆதார் பதிவு பணியை தங்களுக்கே வழங்குமாறு தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை கேட்டது. அதற்கு யுஐடிஏஐ ஆணையம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, தமிழகத்தில் ஆதார் பதிவு பணிகளை அக்டோபர் 1-ம் தேதி (நாளை) முதல் தமிழக அரசு மேற்கொள்ளும். மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் இருந்து இதுசம்பந்தமான பொறுப்பு களை தமிழக அரசிடம் ஒப்படைக் கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
பிறந்த குழந்தைகளுக்கும் ஆதார்
பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வரை ஆதார் பதிவு செய்யவும் தமிழக அரசுக்கு அனுமதி வழங் கப்பட்டுள்ளது. தேசிய அளவில் குழந்தைகளுக்கு ஆதார் வழங்க யுஐடிஏஐ அனுமதி வழங்கியிருப் பது இதுவே முதல்முறை. அதன் படி, டேப்லட் கணினி மூலம் குழந்தைகளின் புகைப்படம் எடுக்கப்படும். குழந்தையின் பிறப்புச் சான்று பெறப்பட்டு, பெற்றோரின் ஆதார் பதிவுடன் இணைத்து, குழந்தைக்கு ஆதார் எண் வழங்கப்படும். 5 வயதுக்கு பிறகு, பயோமெட்ரிக் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஆதார் எண்ணில் இணைக்கப்படும்.
ஏற்கெனவே ஆதார் பதிவுக்காக, சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளுக்கு தலா ரூ.40 வழங்கினோம். இனி அதே தொகை, தமிழக அரசுக்கு வழங்கப்படும். மக்களுக்கு ஆதார் பதிவுகளை தமிழக அரசு இலவசமாகவே மேற்கொள்ளும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு ஆதார் எண் பதிவு செய்ய அரசுக்கு தலா ரூ.27 வழங்கப்படும். 2015 மக்கள்தொகை பதிவேட்டின்படி, 5 வயதுக்கு உட்பட்ட 55 லட்சத்து 66 ஆயிரத்து 804 குழந்தைகளுக்கும் ஆதார் எண் வழங்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
650 நிரந்தர மையங்கள்
அரசு தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு 650 நிரந்தர ஆதார் பதிவு மையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். முதல்கட்டமாக, சென்னை மாநக ராட்சி மண்டல அலுவலகங்கள், மாநிலம் முழுவதும் உள்ள வட்டாட் சியர் அலுவலகங்கள் என 300 இ-சேவை மையங்களில் ஆதார் நிரந்தர பதிவு மையங்கள் அமைக் கப்பட்டுள்ளன. இவை அக்டோபர் முதல் செயல்படும். 2-ம்கட்டமாக, அரசின் எல்காட் நிறுவனம் சார்பில் 350 இடங்களில் நிரந்தர மையங்கள் திறக்கப்படும்’’ என்றனர்.