

மளிகைக் கடை வியாபாரி தன் மனைவி மற்றும் மகன்களுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட் டார். இதில் 3 பேர் உயிரிழந்தனர். மனைவி மட்டும் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
சென்னையைச் சேர்ந்தவர் வீரராகவன். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு தினேஷ், விக்னேஷ் என 2 மகன்கள் இருந்தனர்.
சென்னையில் குடும்பத்தாரு டன் வசித்து வந்த வீரராகவன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு பகுதிக்கு குடிபெயர்ந்தார். அதே பகுதியில் மளிகைக் கடை ஒன்றையும் தொடங்கி வியாபாரம் செய்து வந்த வீரராகவன், வியாபாரத்துக்காக பலரிடம் கடன் வாங்கி அதைத் திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப் படுகிறது.
இந்நிலையில், வீரராகவன் வீடு நேற்று காலை நீண்ட நேரமாக திறக்காமல் இருந்தது. காலையில் அக்கம்பக்கத் தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, வீரராகவன் தன் குடும்பத்தாருடன் மயங்கிக் கிடப்பதைக் கண்டனர். அவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் வீரராகவன், தினேஷ், விக்னேஷ் ஆகிய 3 பேரும் உயிரிழந்துவிட்டதாகவும், ஈஸ்வரி மட்டும் உயிருக்குப் போராடி வருவதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஈஸ்வரிக்கு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக் காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
போலீஸார் விசாரணை
இதுகுறித்து தகவல் வந்ததும் சிப்காட் போலீஸார் மருத்துவமனைக்கு வந்து உயிரிழந்த 3 பேரின் உடல் களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரூ.50 ஆயிரம் கடன் தொல்லையால் குடும்பத்தாருடன் வீரராகவன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.