

மழைநீர் வடிகால்கள் முழுமையாக தூர்வாரப்படாததால் வரும் மழைக்காலத்தில் மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படுமோ என்று பொது மக்களிடையே அச்சம் ஏற்பட் டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு சென்னை யில் உள்ள 1,894 கி.மீ. நீளம் உள்ள மழைநீர் வடிகால்களைத் தூர்வார ரூ.18 கோடி ஒதுக்கப் பட்டது. அவற்றை தூர்வாரி, கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் சிறு கால்வாய் களுடன் இணைத்து மழைநீர் கடலுக்குச் செல்ல நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டது. டெண்டர் விடப் பட்டு, பணிகளும் தொடங்கப்பட் டன. ஆனால், வேலைகள் ஒழுங் காக நடப்பதில்லை என்கின்றனர் மக்கள்.
‘‘மழைநீர் கால்வாயில் உள்ள ஆள்நுழைவு பகுதி (மேன்ஹோல்) வழியாக இறங்கி, கை போகும் அளவுக்கு மட்டும் தூர்வாருகின்றனர். ஒவ்வொரு ஆள்நுழைவு பகுதிக்கு இடையே உள்ள சுமார் 15 அடி நீளமுள்ள பகுதிகளில் மண் முழுமையாக அள்ளப்படுவதில்லை. தவிர, தூர்வாரிய மண்ணையும் சாலை யோரமாக கொட்டுகின்றனர். இதனால் மழை பெய்யும்போது, அது மீண்டும் கரைந்து வடிகாலுக் குள்ளேயே போய்விடுகிறது’’ என்று மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தேவை இயக்க ஒருங்கிணைப் பாளர் இளங்கோ:
வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் மழைநீர் வடிகால் தூர்வாரி 5 ஆண்டுகள் ஆகின்றன. பிரதான சாலைகளில் மட்டும் தூர் வாரப்படுகிறது. உள் பகுதிகளில் இப்பணியை மேற் கொள்வதில்லை. வியாசர்பாடி பகுதியில் உள்ள சாமந்திப்பூ காலனி, நேரு நகர், ஜெகஜீவன்ராம் நகர், தேபர் நகர், எம்ஜிஆர் நகர், உதயசூரியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை.
பிரகாஷ் அம்பேத்கர் நற்பணி மன்ற நிறுவனத் தலைவர் அன்புவேந்தன்:
ஷெனாய் நகர் மண்டலத்தில் உள்ள டி.பி.சத்திரம், கெஜலட்சுமி காலனி, ஜோதியம்மாள் நகர், மஞ்சகொல்லை தெரு உள்ளிட்ட இடங்கள் கடந்த ஆண்டு மழை யில் பெரிதும் பாதிக்கப்பட்டன. சாதாரண மழைக்கே இப்பகுதி களில் மழைநீர் தேங்கும். டி.பி.சத்திரம் பிரதான சாலையில் 103-வது வார்டில் மழைநீர் வடிகால் இடிக்கப்பட்டு, பெரிதாக கட்டப்படுகிறது. 102-வது வார்டில் வேலை நடக்கவில்லை.
சென்னை ஆதரவு குழு உறுப் பினர் நித்யானந்த் ஜெயராமன்:
அடையாறு சாஸ்திரி நகர், தரமணி பகுதிகள் கடந்த ஆண்டு மழையில் பாதிக்கப்பட்டன. இங்கு வெள்ள பாதிப்பைத் தடுக்க எந்த பணியும் நடக்கவில்லை. தரமணி ஆசிய இதழியல் கல்லூரிக்கு அருகே குழாயில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. அதையொட்டி மழைநீர் கால்வாய் உள்ளது. இதன் வழியாகத்தான் மழைநீர் வடிந்து பக்கிங்ஹாம் கால்வாய்க்கு செல்ல வேண்டும். ஆனால், சீரமைப்பு வேலைகள் நடக்கவில்லை.
வேளச்சேரி பகுதியை சேர்ந்த பாஜக தொழிற்துறை பிரிவு மாநிலச் செயலாளர் கேன்ஸ் சவுந்த்:
வேளச்சேரி புறவழிச் சாலையில் கடந்த 3 மாதங்களாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது. ராம்நகர், விஜயநகர் பேருந்து நிலையம், விஜிபி செல்வநகர், டான்ஸி நகர், சாரதி நகர், கருமாரியம்மன் நகர், தண்டீஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணி நடக்கவில்லை. எனவே, கனமழை பெய்தால் மீண்டும் வேளச்சேரி மூழ்கும் அபாயம் இருக்கிறது.
அண்ணாநகர் கிழக்கு ‘எம்’ பிளாக் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் வி.சந்தியா:
எங்கள் பகுதி 9-வது தெருவில் மழைநீர் வடிகால் அமைப்பதாக சொல்லி பல மாதங்களாகியும் இதுவரை அமைக்கப்படவில்லை. அண்ணாநகர் கிழக்கு 101-வது வார்டில் உள்ள 8-வது தெரு, 10-வது தெரு, 2-வது பிரதான சாலையில் உள்ள மழைநீர் வடிகால்கள் இதுவரை தூர்வாரப்படவில்லை.
இதுபற்றி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
விரிவாக்கப்பட்ட சென்னைப் பெருநகரம் 426 சதுரகிலோ மீட்டரில் அமைந்துள்ளது. சென்னையில் ஆயிரத்து 894 கிலோ மீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தென் சென்னையில் 360 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஜெர்மன் நாட்டு நிதியுதவியுடன் (ரூ.1243.15 கோடி) மழைநீர் வடிகால் அமைக்கவும், வட சென்னையில் 429 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் (ரூ.1,818.66 கோடி) மழைநீர் வடிகால் அமைக்கவும் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிதி உதவி பெறுவதற்காக ஜெர்மன், ஜப்பான் நாடுகளுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது.
சென்னைப் பெருநகரில் மொத்தம் உள்ள ஆயிரத்து 894 மழைநீர் வடிகால்களில் 649 வடிகால்கள் நல்ல நிலையில் இருப்பதால், மீதமுள்ள ஆயிரத்து 245 மழைநீர் வடிகால்கள் ரூ.18 கோடியில் தூர் வாரப்பட்டு வருகின்றன. தற்போது 50 சதவீதத்துக்கும் மேல் தூர்வாரும் பணிகள் முடிந்துள்ளன என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் ஒரு மாநகராட்சி உயர் அதிகாரி கூறும்போது, பாதிக்கு மேற்பட்ட இடங்களில் தூர்வாரும் பணி முடிந்துவிட்ட நிலையில், மற்ற பகுதிகளிலும் மழைக்கு முன்பாகவே பணி முடிந்துவிடும். தூர்வாரும்போது அள்ளப்படும் மண்ணை ஒப்பந்ததாரர்கள்தான் முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும். அருகே கொட்டப்படும் மண் மீண்டும் கரைந்து வடிகாலுக்குள் சென்றுவிடாதபடி முழுமையாக அப்புறப்படுத்த அவர்களுக்கு அறிவுறுத்தப்படும்.
மழைநீர் கால்வாயில் ஆட்கள் இறங்கி தூர்வாரக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவு உள்ளது. எனவே, தூர்வாருவதில் நவீன இயந்திரங் களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள் ளது. சுவிட்சர்லாந் தில் நடக்கும் தூர் வாரும் இயந்திரங் கள் கண்காட்சி யைப் பார்வையிட மாநகராட்சி அதி காரிகள் சென்றுள்ள னர். இயந்திரத்தை தேர்வு செய்து வாங்கிய பிறகு மழைநீர் வடிகால்கள் முழுமையாக தூர்வாரப்படும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
மழைக்கு முன்பு வருமா இயந்திரங்கள்?
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக்கு முன்பு, 500 அடிவரை தூர்வாரக்கூடிய ‘சூப்பர் சக்கர்’ என்ற நவீன இயந்திரங்களை அரியாணா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து மாநகராட்சி வாடகைக்கு எடுத்து பணிகளை மேற்கொண்டது. இந்த ஆண்டில் சொந்தமாக வாங்க முடிவு செய்துள்ளனர். சுவிஸ் கண்காட்சியில் பார்த்து, இயந்திரத்தைத் தேர்வு செய்து, மற்ற நடைமுறைகளை முடித்து, அது இங்கு வந்து சேர்வதற்குள் மழைக்காலமே தொடங்கிவிடும். வாங்கும் இயந்திரம் அடுத்த மழைக்காலத்துக்குதான் பயன்படும் என்றும் கூறப்படுகிறது.