Published : 27 Jul 2022 07:08 PM
Last Updated : 27 Jul 2022 07:08 PM
சென்னை: செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் இடத்தில் மருத்துவ சேவை வழங்க 30 ஆம்புலன்ஸ் மற்றும் 1000 மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
செஸ் ஒலிம்பியாட் நடைபெற உள்ள மாமல்லபுரத்தில் மருத்துவ துறை தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சர்வதேச சதுரங்க போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 180 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். வீரர், வீராங்கனைகள் தங்கும் விடுதிகளில் துரித மருத்துவ சேவைக்காக 30 அவசர ஊர்திகள் நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 8 விடுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம், போர் பாயின்ட் ஷெரட்டன் விடுதியில், பொது மருத்துவர், அறுவைச் சிகிச்சை மருத்துவர், மயக்க மருந்து நிபுணர், எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர், மகப்பேறு மருத்துவர் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் கொண்ட சிறப்பு மருத்துவக் குழுவும் பணி அமர்த்தப்பட்டுள்ளது. வீரர், வீராங்கனைகள் உள்நோயாளியாக சிகிச்சை பெற நேர்ந்தால் அவர்களுக்கான மருத்துவச் செலவினை தமிழ்நாடு அரசு ஏற்கும் வண்ணம் மருத்துவக் காப்பீட்டு வசதி செய்யப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் முறையான கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போட்டி நடைபெறும் தினங்களில் பார்வையாளர்களுக்கு கரோனா அறிகுறிக்கான பரிசோதனை செய்து அனுமதிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. வீரர், வீராங்கனைகள் தங்கும் அனைத்து விடுதிகள் மற்றும் போட்டி நடைபெறும் இடங்களில் சுகாதாரப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. யோகா பயிற்சிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேரிடர் அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக மருத்துவ உதவிகளை செய்வதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு பிரத்தியேக பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் சுகாதார முன்னேற்பாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வை செய்யவும் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் 104 என்ற கட்டணமில்லா தொடர்பு எண் மூலம் 24 மணி நேரமும் செயல்படும் சுகாதாரத் துறை கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது. முறையான பயிற்சியுடன் மருத்துவர்கள் மற்றும் களப்பணியாளர்கள் 1000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
தங்கும் விடுதிகளில் உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிப்பதைக் கண்காணிக்க உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் 5 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கண்காணிப்பு குழுவிலும் ஒரு மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் 5 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளனர். உணவின் தரத்தினை உடனடியாக உறுதி செய்யும் பொருட்டு 2 நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடம் மூலம் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட வெளிநபர்கள் நிறுவனம் மூலம் ஆய்வு செய்து 51 சுகாதார மதிப்பீடு சான்றிதழ், 66 சுகாதார நடைபாதை உணவகம், 2 சுகாதார உணவு பாதுகாப்பு மையம் , 256 உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT