

சென்னை: சென்னையில் க்யூஆர் கோடு மூலம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை சோதனை மூலம் கணடறிந்து வரும் நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி முதல் ஒரு முறை பயன்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து இதை அமல்படுத்த தொடர் சோதனை நடத்தப்பட்டது. மேலும் விதிகளை மீறி பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகித்தல், விற்பனை மற்றும் அவைகளைப் பயன்படுத்துவதற்கும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் க்யூர்ஆர் கோடு மூலம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை சோதனை மூலம் கணடறிந்து வரும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சோதனைக்கு செல்லும் போது பலர் இது மறுசுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக் என்று கூறுகின்றனர். ஆனால் அதை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது.
எனவே இதை சரி செய்ய க்யூஆர் கோடு மூலம் சோதனை செய்யப்படவுள்ளது. மறு சுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்ய அனுமதி பெற்றுள்ள நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புகளில் க்யூஆர் கோடை அச்சிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சோதனைக்கு செல்லும் போது இந்த க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து முறையாக அனுமதி பெறப்பட்ட பிளாஸ்டிக் என்பதை கண்டறிவார்கள். சோதனையில் அது போலியான பிளாஸ்டிக் என்று தெரிந்தால் அது பறிமுதல் செய்யப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.