கள்ளக்குறிச்சி சம்பவம் | மாணவி கொலையா, தற்கொலையா எனத் தெரிய வேண்டும்: பிரேமலதா

பிரேமலதா விஜயகாந்த் | கோப்புப் படம்.
பிரேமலதா விஜயகாந்த் | கோப்புப் படம்.
Updated on
2 min read

மதுரை: சின்னசேலம் மாணவி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றினால் மட்டும் போதாது: மாணவி கொலை செய்யப்பட்டாரா அல்லது அது தற்கொலையா என்பதும் தெரிய வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மதுரையில் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று காலை மதுரை வந்தடைந்தார்.

தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''மக்களுக்கான அனைத்து வரிகளும், விலைவாசியும் உயர்ந்து கொண்டே போகிறது. மற்றொருபுறம் மின்சாரக் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, பெட்ரோல், டீசல் என விலைவாசி உயர்வு மக்களை வாட்டுகிறது. ஜிஎஸ்டி உயர்வால் ஏற்கெனவே மக்கள் நிறைய வரிகளை கட்டிக் கொண்டுள்ளனர்,

வருமானத்திற்கு என்ன வழி என்று அரசாங்கம் சிந்திக்க வேண்டும். கரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் வெளியில் வர முடியவில்லை, வருமானம் இல்லை, அரசாங்கத்திற்கான வருமானத்தை மட்டும் அவர்கள் குறிக்கோளாக இருக்கக் கூடாது. பேக் செய்யப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம். அதனால் தேமுதிக சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும். விஜயகாந்த் கூறியது போல இந்த விலைவாசி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இது சம்பந்தமாக நேற்றுகூட விஜயகாந்த் அறிக்கை விட்டிருந்தார். சின்னசேலம் மாணவி உயிரிழப்பு தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி புதைக்கப்பட்ட இடத்தில் ஈரம் கூட காயவில்லை திருவள்ளுவரில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்/ தொடர்ந்து இது போன்ற சம்பவம் நடைபெறுகிறது.

சின்னசேலம் மாணவி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றினால் மட்டும் பத்தாது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைத்து உண்மையில் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டாரா இல்லை அது கொலையா எனக் கண்டறிய வேண்டும்.

மாணவிகள் உண்மையில் தற்கொலை செய்கிறார்கள் என்றால் அந்த தற்கொலைக்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். தமிழக அரசு இதில் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாஜக மீது பல்வேறு ஊழல் வழக்குகளை சுமத்தினார்கள். இன்று பாஜக ஆட்சியில் உள்ளதால் காங்கிரஸ் மீது முன்னர் பதியப்பபட்ட ஊழல் வழக்கை தற்போது கொண்டு வருகிறார்கள்.

ஆளுங்கட்சி முன்னாள் ஆளுங்கட்சி மீது ஊழல் வழக்குகள் போடுவது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் ஒரு விஷயம். யாராக இருந்தாலும் தப்பு செய்தால் தண்டனை பெற்று தான் ஆக வேண்டும். தப்பு செய்திருந்தால் அதற்கான பலனை காங்கிரஸ் அனுபவிக்க வேண்டும். உப்பு தின்னால் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும். தவறு செய்தால் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு சமம்தான். நிச்சயமாக உண்மையில் தப்பு செய்திருந்தால் அவர்களுக்கு தண்டனை கிடைப்பது உறுதி'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in