Published : 30 Sep 2016 12:46 PM
Last Updated : 30 Sep 2016 12:46 PM

ஆணையர் இல்லாமல் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் பழநி நகராட்சி: ஒருங்கிணைப்பு இல்லாமல் ஊழியர்கள் குழப்பம்

ஆணையர் நியமிக்கப்படாமலேயே உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் நிலைக்கு பழநி நகராட்சி தள்ளப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் கடந்த 2011-ம் ஆண்டு ஆணையராக பணிபுரிந்த சிவக்குமார், பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றார். சில மாதங்களுக்குப் பிறகு இவரும் இடமாற்றம் செய்யப்பட்டார். அதற்குப்பின், தற்போதுவரை பழநி நகராட்சிக்கென தனியாக ஆணையர் நியமிக்கப்படவில்லை.

பாலகிருஷ்ணனை அடுத்து கொடைக்கானல் நகராட்சி ஆணையர் சரவணனுக்கு, பழநி நகராட்சி கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. தூரம் அதிகம் என்பதால், அவரால் அடிக்கடி பழநிக்கு வரமுடியவில்லை. முக்கிய கூட்டங்களில் மட்டுமே கலந்துகொள்ள வந்தார். கோப்புகளில் கையெழுத்து வாங்க, பழனி நகராட்சி ஊழியர்கள் கொடைக்கானலுக்குச் சென்றுவந்தனர்.

அதற்குப் பின், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி ஆணையர் காளிமுத்துவிடம் பழநி நகராட்சி பொறுப்பு ஒப்படை க்கப்பட்டது. கவுன்சிலர்களுக்கும் அவருக்கும் இடையே உரசல் ஏற்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி ஆணை யர் சரஸ்வதியிடம் பழநி நகராட்சி ஆணையர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதுவும் தூரம் என்பதால், ஊழியர்கள் சிரமம் அடைந்தனர்.

இந்நிலையில், தற்போது பழநி நகராட்சியின் மேலாளராக உள்ள வெங்கடேசனிடமே ஆணையர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போதுவரை பழநி நகராட்சிக்கு தனியாக நிரந்தர ஆணையர் நியமிக்கப்படவில்லை. இதனால், முக்கிய முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதற்கிடையே தற்போது உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்க ப்பட்டுள்ளதால், வழக்கமான பணி களுடன் தேர்தல் தொடர்பான பணிகளையும் ஊழியர்கள் மேற் கொண்டு வருகின்றனர். ஆனால், அவர்களை ஒருங்கிணைத்து வழிகாட்டுவதற்கு நிரந்தர ஆணையர் இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x