Published : 27 Jul 2022 07:10 AM
Last Updated : 27 Jul 2022 07:10 AM

குடும்ப பிரச்சினையால் தற்கொலை முயற்சி: தனியார் கல்லூரி மாணவி மேல்சிகிச்சைக்காக சென்னையில் அனுமதி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குடும்ப பிரச்சினையால் கல்லூரி வளாக மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றமுதலாம் ஆண்டு மாணவி, மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மணி நகரைச் சேர்ந்த மாணவி ஒருவர் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பார்மஸி கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.பார்ம் படித்து வருகிறார். இவரது தந்தை வெளிநாட்டில் இருப்பதால், தாயுடன் வசித்துவருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கல்லூரிக்கு வந்தவர் முதல் பீரியட் வகுப்பை முடித்துக்கொண்டு கழிவறைக்கு சென்றுள்ளார். சற்று நேரத்தில் கழிவறைக்கு சென்ற மற்ற மாணவிகள், மாடியில் இருந்து கீழே விழுந்து கிடப்பதை அறிந்தனர்.

மாடியில் இருந்து குதித்ததில் இடுப்பு எலும்பு முறிந்து பலத்த காயமடைந்த மாணவியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சைக்கு பிறகு நேற்று காலை மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

எஸ்.பி. விளக்கம்

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கல்லூரி மாணவி நேற்று முன்தினம் காலை 10.20க்கு கல்லூரியின் முதல் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரின் தாயார் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்கொலை முயற்சி என வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மாணவியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எழுதி இருந்தது கண்டறியப்பட்டு, இவ்வழக்கு புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x