

தூத்துக்குடியில் இருந்து, இலங்கைக்கு கடத்த முயன்ற 477 அரிய வகை நன்னீர் ஆமைகளை, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் இருந்து அரிய வகை நன்னீர் ஆமைகளை சிலர் காரில் கடத்தி வந்து, தூத்துக்குடி அருகே உள்ள கீழ வைப்பாறு கடல் பகுதியில் இருந்து, இலங்கைக்கு கடத்த முயற்சி செய்வதாக, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த 26-ம் தேதி இரவு மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், கிழக்கு கடற்கரை சாலையில் கீழ வைப்பாறு பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த காரை, அதிகாரிகள் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
அந்த காரில், 23 பைகளில் அரிய வகை நன்னீர் ஆமைகள் உயிரோடு வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த தமீம் அன்சாரி, எம்.மணி, அப்துல் ரகுமான், கீட்டன் குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்
இந்த நன்னீர் ஆமைகள் கர்நாடகம், அசாம், மேற்குவங்கம் போன்ற வடமாநில ஆறுகளில் வசிக்கக் கூடியவை. அங்கிருந்து கடத்தி வந்து சென்னை வழியாக இங்கே கொண்டுவந்து, இலங்கைக்கு கடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவை திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணையில் விடப்பட்டன.