Published : 26 Jul 2022 07:53 PM
Last Updated : 26 Jul 2022 07:53 PM

“ஆட்சியாளர்கள் சேவைத் துறையில் லாபம் பார்க்க நினைப்பது நல்லதல்ல” - தங்கமணி

திருச்சி: "போக்குவரத்தும், மின்சாரமும் மக்களுக்கான சேவைத் துறை. எனவே சேவைத் துறையில் லாபம் பார்க்க நினைப்பது ஆட்சியாளர்களுக்கு நல்லது இல்லை" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில், திருச்சி அண்ணாசிலை அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி, தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியது: "உதய் மின் திட்டத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுமே கையெழுத்திட்ட பின்னர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா இரண்டு கோரிக்கைகளை வைத்தார்.

மூன்று மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும், விவசாயிகளுக்கு மீட்டர் அமைத்தல் உள்ளிட்டவை அந்த உதய் மின் திட்டத்தில் இடம்பெற்றிருந்தன. இந்த இரண்டையும் நீக்கினால்தான் உதய் மின் திட்டத்திற்கு ஆதரவளிப்பேன் என்று ஜெயலலிதா கூறியிருந்தார்.அவரது கோரிக்கையை ஏற்று இந்தியா முழுவதுமே, இவை இரண்டும் நீக்கப்பட்டன.

கடன் சுமை ஏறியிருந்தாலும், புதிய மின் திட்டங்கள், 60 ஆயிரம் கோடி அளவிற்கு அதிமுக ஆட்சியில் கொண்டு வந்துள்ளோம். அந்த பணிகள் தற்போதும் நடந்துகொண்டிருக்கிறது. எதனால் கடன் ஆனது என்று பார்க்க வேண்டும். இது சேவை துறை, வருமானம் பார்க்கும் துறை கிடையாது. போக்குவரத்தும் , மின்சாரமும் மக்களுக்கான சேவைத் துறை. எனவே சேவைத் துறையில் லாபம் பார்க்க நினைப்பது ஆட்சியாளர்களுக்கு நல்லது இல்லை" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x