Published : 26 Jul 2022 04:18 AM
Last Updated : 26 Jul 2022 04:18 AM

புதுச்சேரியில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு

கோவை: கோவைக்கு கொண்டு வரப்பட்ட, செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு அமைச்சர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்க உள்ளது. இதையொட்டி கடந்த மாதம் 19-ம் தேதி டெல்லி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றி வைத்து, ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட ஒலிம்பியாட் ஜோதி, புதுச்சேரியில் இருந்து கோவைக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

ரேஸ்கோர்ஸ்-க்கு வந்தடைந்த ஒலிம்பியாட் ஜோதிக்கு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திறந்தவெளி ஜீப் மூலம் ஒலிம்பியாட் ஜோதி, ரேஸ்கோர்ஸில் இருந்து ஊர்வலமாக அவிநாசி சாலை வழியாக கொடிசியா தொழிற்காட்சி வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு மாவட்ட நிர்வாகத்தினர், விளையாட்டுத் துறையினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, கா.ராமச்சந்திரன், மு.பெ.சாமிநாதன், வி.செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர்கள் ஜி.எஸ்.சமீரன் (கோவை),அம்ரித் (நீலகிரி), வினீத் (திருப்பூர்), கிருஷ்ணன் உண்ணி (ஈரோடு), செஸ் கிராண்ட் மாஸ்டர் ஷியாம் சுந்தர், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோரும் பங்கேற்றனர். கோவைக்கு கொண்டு வரப்பட்ட ஜோதியை, கிராண்ட் மாஸ்டர் ஷியாம் சுந்தர் பெற்று, 4 அமைச்சர்களிடமும் வழங்கினார். அவர்கள் ஜோதியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் வழங்க அவர், செஸ் வீராங்கனை நிர்மலாவிடம் ஒப்படைத்தார். இந்த ஜோதி மதுரைக்குகொண்டு செல்லப்பட உள்ளது.

ஈரோடு, திருப்பூர், நீலகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, வேலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல் ஆகிய 16 மாவட்ட பிரதிநிதிகளிடம் மாதிரி ஒலிம்பியாட் ஜோதி ஒப்படைக்கப்பட்டது. செஸ் கிராண்ட் மாஸ்டர் ஷியாம் சுந்தர், விழா மேடையில் பார்வையாளர்களின் முன்னிலையில் 10 சிறுவர்களுடன் ஒரே நேரத்தில் செஸ் விளையாடினார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x