Published : 26 Jul 2022 07:10 AM
Last Updated : 26 Jul 2022 07:10 AM
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸின் 84-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ், தனது 84-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி, சென்னையில் உள்ள பாமக தலைவர் அன்புமணியின் வீட்டில் குடும்பத்தினருடன் சேர்ந்து மரக்கன்று நட்டார். குடும்பத்தினர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘பாமக நிறுவனரும், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவருமான ராமதாஸுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள். சமூகநீதிக் களத்தில் மேலும் பல்லாண்டுகள் தாங்கள் தொடர்ந்து பணியாற்ற விழைகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தனது வாழ்த்துச் செய்தியில், ‘பாமக நிறுவனர், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் ராமதாஸுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘பாட்டாளி மக்களுக்கு அரணாக இருப்பவர், அன்பு உள்ளம் கொண்ட இளைஞர்களின் வழிகாட்டி ராமதாஸின் 84-வது பிறந்த தினத்தில் அவர்நீண்ட ஆயுளுடன் மக்கள் சேவையை தொடர வாழ்த்துகிறேன்’ என கூறியுள்ளார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: மூத்த அரசியல் தலைவர், சமுதாய முன்னேற்றத்துக்காக மகத்தான பணிகள் ஆற்றிய பாமக நிறுவனர் ராமதாஸின் பிறந்த நாளில், அவரது சேவை மென்மேலும் தொடரவும், அவர் பல்லாண்டுகள் வாழவும் இறைவன் அருள் பரிபூரணமாகக் கிடைக்கட்டும்.
தமிழக சட்டப்பேரவை காங். தலைவர் செல்வப்பெருந்தகை: பிறந்த நாள் காணும் பாமக நிறுவனரும், மூத்த அரசியல்வாதியுமான ராமதாஸ் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும், அனைத்து வளங்களும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட பலர் ராமதாஸுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாமக செய்தித் தொடர்பாளரான வழக்கறிஞர் க.பாலு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இனிப்பு வழங்கி, ராமதாஸ் பிறந்தநாளை கொண்டாடினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT