செஸ் ஒலிம்பியாட் தொடக்கம் | பிரதமர் மோடி நாளை மறுதினம் சென்னை வருகை: விமானநிலையம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

செஸ் ஒலிம்பியாட் தொடக்கம் | பிரதமர் மோடி நாளை மறுதினம் சென்னை வருகை: விமானநிலையம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
Updated on
2 min read

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க, வரும் 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வரவுள்ள நிலையில், விமானநிலையம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. இதன் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. அதேபோல, வரும் 29-ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.

இந்த இரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி சென்னை வருகிறார். அகமதாபாத்தில் இருந்து அன்று மாலை 4.45 மணிக்கு சென்னை விமானநிலையம் வரும் பிரதமர், விமானநிலையத்தில் ஒரு மணி நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர், அங்கிருந்து 5.45 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு செல்கிறார்.

அங்கிருந்து காரில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார். நிகழ்ச்சி முடிந்து இரவு 8 மணியளவில் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு செல்லும் பிரதமர், அங்கு இரவு தங்குகிறார். முன்னதாக, பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை அவர் சந்திக்கிறார்.

மறுநாள் காலை 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகம் செல்லும் பிரதமர், பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு, பிற்பகலில் சென்னை விமானநிலையம் சென்று, அங்கிருந்து மீண்டும் அகமதாபாத் செல்கிறார்.

பிரதமர் மோடியின் இப்பயணம் அரசு ரீதியாகவும், அரசியல் ரீிதியாகவும் முக்கியத்துவம் பெற உள்ளதாக கூறப்படும் நிலையில், பிரத்யேக பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரதமர் வருகையை முன்னிட்டு வரும் 28-ம் தேதி பிற்பகல் முதல், 29-ம் தேதி பிற்பகல் வரை சென்னை நகரம் முழுவதும் காவல் துறையினர் மற்றும் பிரதமரின் பாதுகாப்பு அலுவலர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். பிரதமரின் பாதுகாப்புக்காக வந்துள்ள, 60 பேர் கொண்ட எஸ்பிஜி குழுவினர், விமானநிலையம், நேரு உள்விளையாட்டு அரங்கம், அண்ணா பல்கலைக்கழகம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர்.

மேலும், மத்திய தொழில் பாதுகாப்புப் படை, விமானநிலைய பாதுகாப்புப் படையினர், விமானநிலைய உயரதிகாரிகள்,சென்னை மாநகர காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பிரதமரை வரவேற்கும், அவரை சந்திக்கும் நபர்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி சென்னையில் தங்கும் நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமானநிலையம் 7 அடுக்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. விமானநிலையத்தில் ஒரு மணி நேரம் பிரதமர் ஓய்வெடுப்பதால், பழைய விமானநிலையம் டெல்லி சிறப்பு பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு, பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

விமானநிலைய வளாகத்தில் உள்ள சரக்கு, கூரியர், அஞ்சலகங்களின் நிரந்தரப் பணியாளர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இந்தக் கட்டுப்பாடுகள் வரும் 29-ம் தேதி மாலை வரை அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

22 ஆயிரம் போலீஸார்

பிரதமர் வருகையை முன்னிட்டு, சென்னையில் 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுதவிர, பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள், வழித்தடம் ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ள பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணா சாலை, காமராஜர் சாலை, கிண்டி பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கடைகள் முன்பு வாகனங்களை நிறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நகரில் யாரும் அனுமதியின்றி தங்கியிருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விமானநிலையத்தில் பிரதமர் மோடி ஒரு மணி நேரம் ஓய்வெடுப்பதால், பழைய விமானநிலையம் டெல்லி சிறப்பு பாதுகாப்புப் படையின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in